பாதுகாப்பு,நாட்டின் இறையாண்மை காரணமாகவே அரசு ஊழியர்கள் வேஸ் பயன்படுத்த தடை - பிரதமர்

25 அக்டோபர் 2026, 2:43 AM
பாதுகாப்பு,நாட்டின் இறையாண்மை காரணமாகவே அரசு ஊழியர்கள் வேஸ் பயன்படுத்த தடை - பிரதமர்

மலாக்கா, அக் 25 : நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கப் பணியாளர்கள் வேஸ் (Waze) வழிகாட்டி செயலியைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இந்தத் தடை வேஸ் செயலியை ஒட்டுமொத்தமாக முடக்குவதற்காக அல்ல என்றும், குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளும் அரசு அதிகாரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் அபாயத்தைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு பரிசீலிக்கப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.

வேஸ் செயலி இஸ்ரேலைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துடன் தொடர்புடையது என்பதால் இந்த விவகாரம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்துடன் ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால், அனைத்துலக நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் எந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் என்ற சட்டக் கேள்வியும் இதில் அடங்கியுள்ளது என்றாரவர்.

மேலும், தற்போதுள்ள மாற்று செயலிகளின் செயல்திறன் போதுமானதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பிறகே, வேஸ் செயலி மீதான ஒட்டுமொத்தத் தடை குறித்த அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

இந்த நடவடிக்கையில் உள்ள சில குறைபாடுகள் மற்றும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட பிரதமர், 'துஜு' (TuJu) உள்ளூர் வழிகாட்டி செயலியின் தற்போதைய செயல்பாட்டில் இன்னும் குறைபாடுகள் இருப்பதாகவும், அது மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது என்றும் ஒப்புக்கொண்டார்.

இவ்வேளையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தாலும், மடானி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை ரோன்95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற அளவிலேயே நீடிக்கும், அது உயர்த்தப்படாது என அன்வார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மக்களைச் சிரமத்திற்குள்ளாக்குவதை விட அரசாங்கம் அந்தச் சுமையைத் தாங்குவதே சிறந்தது என்று கூறிய அவர், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் காப்பதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கை என்றார்.

மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, நேற்றிரவு ஹங் ஜெபாட் அரங்கில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.