காற்று வீசும் திசை மாறுவதால் அடுத்த வாரம் புகை மூட்டம் தணியலாம்

20 அக்டோபர் 2026, 11:27 AM
காற்று வீசும்  திசை மாறுவதால்  அடுத்த வாரம் புகை மூட்டம் தணியலாம்
காற்று வீசும்  திசை மாறுவதால்  அடுத்த வாரம் புகை மூட்டம் தணியலாம்

ஷா ஆலாம், அக் 20: மலேசியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் புகைமூட்டம், அடுத்த வாரம் படிப்படியாகத் தணியுமென கணிக்கப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவை நோக்கி வீசும் காற்றின் திசை தென்மேற்கிலிருந்து வடகிழக்காக மாறுவதன் மூலம் , புகை மூட்டம் மெல்லத் தணியுமென மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்தார்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப்

எனினும், இந்த முன்னறிவிப்புக் காலம் ஐந்து நாட்களுக்கும் அதிகமாக நீடிப்பதால், தற்போதைய கணிப்புகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் மீடியா சிலாங்கூர் ஊடகத்திடம் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக இந்தக் காற்றின் திசை மாற்றம் நிகழக்கூடும்.

ஒருவேளை காற்றின் திசை மீண்டும் தென்மேற்கு திசையிலிருந்து, அதாவது இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவை நோக்கி வீசத் தொடங்கினால், இந்த எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினை மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையில், மழையின் அளவை அதிகரிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாநிலங்கள் மற்றும் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் செயற்கை மழைப் பொழிவு திட்டத்தை வானிலை ஆய்வுத் துறை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டம் அக்டோபர் 19 , 20 ஆம் தேதிகளில் ஜொகூரிலும், அக்டோபர் 21 முதல் 23 -ஆம் தேதி வரை தேதி வரை மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேசங்களான கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவிலும் மேற்கொள்ளப்படும்.

தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு(NADMA), மலேசிய அரச விமானப்படை (TUDM) மற்றும் மலேசிய பொது விமானப் போக்குவரத்து வாரியம் (CAAM) ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இந்தச் செயற்கை மழைப் பொழிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் தற்போதைய வானிலை நிலவரங்களை myCuaca செயலி அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் தெரிந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.