ஷா ஆலம், அக். 20 – சிலாங்கூர், டெங்கிலில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறையில் இருந்தபோது மூச்சுவிடச் சிரமப்பட்ட முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று நிகழ்ந்ததாகவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆரம்பக்கட்ட சுவாச உதவி வழங்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக புத்ராஜெயா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், மருத்துவமனையில் அந்த மாணவி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டதாகச் செப்பாங் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி நோர்ஹிசாம் பஹாமான் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று இரவு 7.30 மணியளவில் பெண் ஒருவர் அளித்த புகாரைப் போலீசார் பெற்றதாக BH Online செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, செப்பாங் மாவட்டக் காவல் தலைமையகத்தின் (IPD Sepang) குற்றப் புலனாய்வுப் பிரிவு சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து வருகிறது.
உயிரிழந்த மாணவியின் பிரேதப் பரிசோதனை இன்று காலை 8 மணியளவில் புத்ராஜெயா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நோர்ஹிசாம் தெரிவித்தார்.
இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத அல்லது தவறான தகவல்களைப் பொதுமக்கள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் விஷ்ணோ குமார் தரும ரெத்தினத்தை 011-1102 1528 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.







