ஷா ஆலாம், செப். 28 – கோலா லங்காட், மோரிப் பாரு கடற்கரையில் நடைபெற்ற துப்புரவு பணியில் மொத்தம் 161.3 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன.
'ஓஷன் கன்சர்வன்சி' (Ocean Conservancy) அமைப்பின் 'சர்வதேச கடற்கரைச் சுத்தம் செய்யும் பணி 2026'-இன் (International Coastal Cleanup 2026) ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அரசுத் துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள், குடியிருப்பாளர் சங்கங்கள், அரசு சாரா அமைப்புகள், பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.
இந்த நடவடிக்கையில் மோரிப் பாரு கடற்கரையில் இருந்து 161.3 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டதாகக் கோலா லங்காட் ஊராட்சி மன்றம் தெரிவித்தது.
சேகரிக்கப்பட்ட கழிவுகள் தொடர்பான தரவுகளை முறையாகப் பதிவு செய்ய , Reef Check Malaysia அமைப்பின் CleanSwell செயலி பயன்படுத்தப்பட்டதாகவும் MPKL தெரிவித்தது.

இந்நிகழ்வில் கடற்கரைத் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுடன், பங்கேற்பாளர்களை மேலும் ஆர்வத்துடன் ஈடுபடுத்தும் வகையில் ‘அதிக எடை கொண்ட குப்பை யாருடையது?’ என்ற போட்டியும் நடத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், கடல் மற்றும் நில வாழ்வினங்களைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கும் இத்திட்டம் பங்களிப்பதாக MPKL குறிப்பிட்டது.







