புகைமூட்டம்: நாட்டில் விவசாயிகளின் வருமானம் குறையும் அபாயம்

19 அக்டோபர் 2026, 8:26 AM
புகைமூட்டம்: நாட்டில் விவசாயிகளின் வருமானம் குறையும் அபாயம்

ஷா ஆலாம், அக். 19 – மலேசியாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் புகைமூட்டத்தால் காய்கறிகளின் வளர்ச்சியும் உற்பத்தித் திறனும் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருமானமும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீண்டகாலமாகப் போதிய சூரிய ஒளி கிடைக்காத சூழல் காய்கறிகளின் இயல்பான வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும். தாவரங்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒளிச்சேர்க்கை செயல்முறை இதனால் மந்தமடையும் என மலேசிய காய்கறி விவசாயிகள் சங்கத் தலைவர் லிம் செர் கீ குறிப்பிட்டார்.

மலேசிய காய்கறி விவசாயிகள் சங்கத் தலைவர் லிம் செர் கீ

இதன் விளைவாக, காய்கறிகளின் அளவு, இலைகளின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த விளைச்சல் ஆகியவை பாதிக்கப்படலாம் என்றார் அவர்.

இருப்பினும், புகைமூட்டம் ஏற்படும் பாதிப்பின் அளவு ஒவ்வொரு விவசாயப் பகுதிக்கும் மாறுபடும். அனைத்து வகையான காய்கறிகளும் ஒரே அளவில் பாதிக்கப்படும் எனக் கூற முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

காய்கறிகளின் வளர்ச்சி மந்தமடைந்தாலோ அல்லது விளைச்சல் குறைந்தாலோ, பயிர்களை அறுவடை செய்வதற்கான காலம் நீடிக்கக்கூடும். இதனால் விவசாயிகளின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிக்கும்.

மேலும், விளைபொருட்களின் தரமும் பாதிக்கப்பட்டால், விவசாயிகளின் வருமானம் குறையக்கூடும். அதேவேளையில், உரம், தொழிலாளர் ஊதியம், தண்ணீர் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அவர்கள் தொடர்ந்து ஏற்க வேண்டியிருக்கும் என அவர் கோஸ்மோவிடம் தெரிவித்துளார்.

எனவே, விவசாயிகள் தங்களது பயிர்களுக்குப் போதிய நீர்ப்பாசனம் வழங்கப்படுவதை உறுதிசெய்வதுடன், இலைகளின் நிலை மற்றும் பயிர்களின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களையும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றார் லிம் செர் கீ.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காற்று மாசுபாட்டின் அளவைத் தொடர்ந்து கண்காணித்து, விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் உணவு விநியோகத்தில் காய்கறித் துறை முக்கியப் பங்கு வகிப்பதால், புகைமூட்டப் பிரச்சனைக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், ஏற்கெனவே அதிக உற்பத்திச் செலவுகளை எதிர்கொண்டு வரும் உள்ளூர் விவசாயிகளுக்கு மேலும் சுமை ஏற்படக்கூடும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.