இறக்குமதி செய்யப்படும் 5 வகை காய்கறிகளுக்கு 'CoA' சான்றிதழ் கட்டாயம்

15 மே 2026, 1:55 AM
இறக்குமதி செய்யப்படும் 5 வகை காய்கறிகளுக்கு 'CoA' சான்றிதழ் கட்டாயம்

புத்ராஜெயா, மே 15 – நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் இறக்குமதி செய்யப்படும் ஐந்து வகையான காய்கறிகளுக்குப் பகுப்பாய்வுச் சான்றிதழ் எனப்படும் CoA (Certificate of Analysis) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுவதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த புதிய விதிமுறை குறிப்பாக சிவப்பு மிளகாய், வெள்ளரிக்காய், தக்காளி, கடுகு கீரை (Sawi) மற்றும் உருண்டை முட்டைக்கோஸ் ஆகிய காய்கறிகளுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சந்தைக்குள் நுழையும் இறக்குமதி காய்கறிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட தரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தச் சான்றிதழ் அமலாக்க நடவடிக்கையானது சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் திட்டம், மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வுச் சேவைத் துறை (MAQIS) மற்றும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பு (AKPS) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும்.

அதேவேளையில், இந்த புதிய நடைமுறையினால் நாட்டின் காய்கறி விநியோகம் மற்றும் விலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்துத் துறை நிறுவனங்களுடனும் அமைச்சு அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான விண்ணப்ப வழிகாட்டுதல்கள் மற்றும் விரிவான விவரங்களை இறக்குமதியாளர்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் பார்வையிடலாம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.