ஷா ஆலாம், அக். 19 – இன்று காலை 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 26 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
இதனிடையே சிலாங்கூரில் ஜோஹான் செத்தியாவில் 173 என காற்று மாசுக் குறியீடு (IPU) பதிவாகியுள்ளது. இது நாட்டில் பதிவான அதிகபட்ச காற்று மாசுக் குறியீடு அளவாகும்.
மலேசியாவின் காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பான APIMS வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சிலாங்கூரில் மேலும் நான்கு பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. பெட்டாலிங் ஜெயாவில் 160, கிள்ளானில் 158, பந்திங்கில் 157, ஷா ஆலாமில் 156 எனக் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் காற்றின் தரம் கவலைக்கிடமாக உள்ளது. நீலாயில் 171 என பதிவாகியுள்ள நிலையில், சிரம்பானில் 166 ஆகவும், போர்ட் டிக்சனில் 154 ஆகவும் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.
மலாக்கா மாநிலத்தில் புக்கிட் ரம்பாய் பகுதியில் 169 -ஆக IPU அளவு உள்ளது . அதேவேளையில், அலோர் காஜா மற்றும் மலாக்கா மாநகரப் பகுதிகளில் தலா 165 என்ற அளவில் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.
ஜோகூரில் மொத்தம் ஏழு பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது. பாசிர் கூடாங்கில் 165, தங்காக்கில் 164, கோத்தா திங்கியில் 160, பத்து பகாட்டில் 159, குளுவாங்கில் 155, லார்கினில் 153, பெங்கராங்கில் 151 எனக் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.
பகாங் மாநிலத்திலும் இரண்டு பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. ரொம்பினில் 159 என்ற குறியீடு பதிவாகியுள்ளதுடன், குவாந்தான் இந்திரா மக்கோத்தா பகுதியில் 123 ஆகவும் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.





