இந்தோனேசியாவில் கடும் புகைமூட்டம்: 2,604 உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிப்பு

20 அக்டோபர் 2026, 9:20 AM
இந்தோனேசியாவில் கடும் புகைமூட்டம்: 2,604 உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிப்பு

ஜகார்த்தா, அக். 20 – இந்தோனேசியாவில் காடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் ஏற்படும் தீச்சம்பவங்களால் நீடித்து வரும் கடும் புகைமூட்டம், விமானப் போக்குவரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 2,604 உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14 அனைத்துலக விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் விமானப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் லுக்மான் எஃப். லைசா இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் நேற்று வரை பதிவான பாதிப்புகளில், 1,420 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும், 1,129 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன், 23 விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.

இதனிடையே, ஆறு விமானங்கள் புறப்பட்ட விமான நிலையங்களுக்கே திரும்பியுள்ள நிலையில், 26 விமானச் சேவைகள் திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்னதாகப் புறப்படுமாறு மாற்றியமைக்கப்பட்டன.

ரத்து செய்யப்பட்ட 14 அனைத்துலக விமானச் சேவைகளில், சிங்கப்பூர்–பொந்தியானாக் இடையிலான இருவழிப் பயணங்களைச் சேர்ந்த 12 சேவைகள் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி முதல் செப்டம்பர் 23ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டன.

மேலும், சிங்கப்பூர்–பலேம்பாங் இடையிலான இருவழிப் பயணங்களைச் சேர்ந்த இரண்டு விமானச் சேவைகள் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானப் போக்குவரத்து பாதுகாப்பே முதன்மையானது என வலியுறுத்திய லுக்மான், வானிலை நிலவரம், பார்வைத்திறன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பாதுகாப்பு அடிப்படையிலேயே விமானச் சேவைகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறினார்.

தரையில் நிலவும் சூழ்நிலைகள் பாதுகாப்பான விமான இயக்கத்திற்கு அனுமதிக்காதபட்சத்தில், விமானச் சேவை அட்டவணைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று அவர் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விமான நிலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அதன் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் லுக்மான் குறிப்பிட்டார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.