ஷா ஆலாம், அக். 18 – சிலாங்கூரில் நிலவும் புகைமூட்டம் காரணமாக, மாநிலக் கல்வித் துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிலையங்களும் நாளை, அக்டோபர் 19ஆம் தேதி வழக்கம்போல் செயல்படும். இருப்பினும், அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளுக்கு வருகை தரும் மாணவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியுமாறு ஊக்குவிக்கப்படுவதாகச் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

இதற்கிடையில், தங்களது பிள்ளைகளின் உடல்நலம் குறித்து கவலைப்படும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், அது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பள்ளி நிர்வாகத்தினர் மலேசிய சுற்றுச்சூழல் துறை (JAS) வெளியிடும் காற்று மாசுக் குறியீட்டு (IPU) அளவுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புகைமூட்டம் பாதிப்பால் உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அதிக ஆபத்துள்ள மாணவர்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் பள்ளி சமூகத்தினர் நிலைமை தொடர்பான அண்மைய தகவல்களைப் பெறுவதற்கு மாநிலக் கல்வித் துறை அல்லது சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அதிகாரப்பூர்வத் தளங்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இன்று பிற்பகல் 3.20 மணி நிலவரப்படி, சிலாங்கூரில் ஐந்து பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. இதனை மலேசிய காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) தெரிவித்துள்ளது.

ஜோஹான் செத்தியாவில் அதிகபட்சமாக 159 என API பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஷா ஆலாமில் 157, கிள்ளானில் 155, பெட்டாலிங் ஜெயாவில் 154, பந்திங்கில் 153 என்ற அளவுகளிலும் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சிலாங்கூரில் மிதமான காற்றுத் தரத்தைப் பதிவு செய்த ஒரே கண்காணிப்பு நிலையமாக கோலா சிலாங்கூர் தொடர்ந்து விளங்குகிறது. அங்கு காற்று மாசுக் குறியீடு 78ஆகப் பதிவாகியுள்ளது.







