சிலாங்கூரில் பொது போக்குவரத்தை மேம்படுத்த 5 முன்னெடுப்புகள்: நிபுணர்

18 அக்டோபர் 2026, 4:46 AM
சிலாங்கூரில் பொது போக்குவரத்தை மேம்படுத்த 5 முன்னெடுப்புகள்: நிபுணர்

கோலாலம்பூர், அக். 18 – கிள்ளான் பள்ளத்தாக்கின் பெருநகரப் பகுதியில் (GKV) மேற்கொள்ளப்படும் மொத்தப் பயணங்களில் சுமார் 83 விழுக்காடு தனியார் வாகனங்கள் மூலம் நடைபெறுகின்றன.

இதனால், பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க சிலாங்கூர் ஐந்து முக்கிய உத்திகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை நிபுணர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்தி ஒருங்கிணைப்பதுடன், பயணத் தேவையை நிர்வகித்தல், பயணத்தின் தொடக்க மற்றும் இறுதிக் கட்ட இணைப்புகளை வலுப்படுத்துதல், பொதுப் போக்குவரத்தை மையமாகக் கொண்ட நகர்ப்புற மேம்பாட்டை (TOD) ஊக்குவித்தல், போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்.

இதனை தென்கிழக்கு ஆசியாவிற்கான போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கை நிறுவனம் (ITDP) இயக்குநர் கோங்கோம்துவா எஸ்கான்டோ சிதாங்காங் தெரிவித்தார்.

சிலாங்கூரில் பல்வேறு போக்குவரத்து முறைகளை உள்ளடக்கிய வலையமைப்பு ஏற்கெனவே இருந்தாலும், பயணத்தின் தொடக்க இடத்திலிருந்து போக்குவரத்து நிலையத்தைச் சென்றடைவதிலும், அங்கிருந்து இறுதி இலக்கை அடைவதிலும் உள்ள சிக்கல்கள் பொதுப் போக்குவரத்தின் செயல்திறனைக் கட்டுப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஒரு போக்குவரத்து முறையிலிருந்து மற்றொரு முறைக்கு மாறுவதில் உள்ள சிரமங்களும் நீண்ட நேரக் காத்திருப்பும் பயணிகளுக்குப் பெரும் தடையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு அதிகமான வாகனங்களையோ அல்லது கூடுதல் சேவைகளையோ அறிமுகப்படுத்துவது மட்டுமே தீர்வாகாது. அவை அனைத்தும் பிரதான பொதுப் போக்குவரத்து வலையமைப்புடன் முறையாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

போக்குவரத்துச் சேவைகளின் கால அட்டவணைகளையும் முறையாக ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய கோங்கோம்துவா, பேருந்து மூலம் ஒரு நிலையத்தைச் சென்றடையும் பயணி, அங்கிருந்து ஐந்து நிமிடங்களுக்குள் எம்ஆர்டி ரயிலைப் பிடிக்கக்கூடிய வகையில் சேவைகள் திட்டமிடப்பட வேண்டும் என்றார்.

பயணிகள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், வெவ்வேறு நிர்வாகப் பகுதிகளுக்கும் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருப்பதால், போக்குவரத்துச் சேவைகள் எல்லைகளைக் கடந்து தடையின்றிச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிலாங்கூர் சர்வதேச வர்த்தக உச்சநிலை மாநாட்டை (SIBS) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் நகர்வுத்திறன் கருத்தரங்கில் உரையாற்றியபோது அவர் இக்கருத்துகளை முன்வைத்தார்.

இதற்கிடையில், ரயில் நிலையங்களுக்கு அருகில் வீடமைப்புத் திட்டங்களையோ வணிக வளாகங்களையோ உருவாக்குவது மட்டுமே, அவற்றைப் பொதுப் போக்குவரத்தை மையமாகக் கொண்ட நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களாகக் கருதுவதற்குப் போதுமானதல்ல.

அத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களில் பாதுகாப்பான நடைபாதைகள், பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்குச் செல்வதற்கான வசதிகள், இணைப்புப் பேருந்து அல்லது சிற்றுந்துச் சேவைகள் ஆகியவை முறையாக இடம்பெற வேண்டும் என்றார் கோங்கோம்துவா.

மேலும், சாலைகள் அமைக்கப்படுகின்றன; ஆனால், பாதசாரிகளுக்கான நடைபாதைகள் உருவாக்கப்படுவதில்லை. ஒரு சிறந்த பொதுப் போக்குவரத்து மைய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் எளிதான அணுகல், சிறந்த போக்குவரத்து இணைப்பு, முறையான ஒருங்கிணைப்பு ஆகியவை அவசியம்.

அதேவேளை, ரயில் நிலையங்களை அடைவதற்கான வசதிகளை மேம்படுத்த, படிக்கட்டுகளைக் கொண்ட மேம்பாலங்களுக்குப் பதிலாக, சாலையின் மட்டத்திலேயே பாதுகாப்பான பாதசாரிக் கடப்பிடங்களை அமைப்பதற்கும் அவர் பரிந்துரைத்தார்.

மேம்பாலங்களைப் பயன்படுத்தும்போது பயண நேரம் அதிகரிப்பதுடன், குறிப்பாக நடமாட்டச் சிரமம் உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் ரயில் நிலையங்களைச் சென்றடைவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிலாங்கூரில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, வாகன நிறுத்துமிடங்களை முறையாக நிர்வகித்தல், சாலைகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை மறுசீரமைத்து பொதுப் போக்குவரத்துக்கும் பாதசாரிகளுக்கும் அதிக இடவசதி ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், போக்குவரத்துக் கொள்கைகள் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.

நகர்ப்புறப் பகுதிகளுக்கும் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான போக்குவரத்துத் தீர்வுகளைச் செயல்படுத்த முடியாது.

நகர்ப்புறங்களில் நடைபயிற்சி மற்றும் மிதிவண்டிப் பயணத்துக்கான வசதிகள், பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட ஒருங்கிணைந்த கட்டட மேம்பாடுகள், வாகன நிறுத்துமிடங்களின் முறையான நிர்வாகம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் பயணிகளின் தேவைக்கேற்ப இயங்கும் போக்குவரத்துச் சேவைகளை அறிமுகப்படுத்துதல், உள்ளூர் போக்குவரத்து மையங்களுக்குச் செல்ல பாதுகாப்பான நடைபாதைகளை அமைத்தல் ஆகியவை அவசியம் என்றார்.

இறுதியாக, போக்குவரத்துச் சேவைகளை நிர்வகிக்கும் பல்வேறு அதிகார அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.