ஷா ஆலாம், அக். 11 — 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட MyKOMUTER50 மாதாந்திர வரம்பற்ற பயணச் சீட்டுத் திட்டம், சிலாங்கூர் முன்னதாக அறிமுகப்படுத்தியுள்ள RM30 பொதுப் போக்குவரத்துக் கட்டண மானியத் திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.
மேலும், அத்திட்டம் மாநிலத்தில் அதிகமானோர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என சிலாங்கூர் மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் தெரிவித்தார்.
தேவைக்கேற்ப இயங்கும் போக்குவரத்துச் சேவையான டிமாண்ட் ரெஸ்பான்சிவ் டிரான்ஸிட் (DRT) மற்றும் கேடிஎம் கொமியூட்டர் (KTM Komuter) சேவைகளைப் பயன்படுத்துவோருக்காக RM30 பயணக் கட்டண மானிய ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மாநில மற்றும் மத்திய அரசுகள் முன்னெடுக்கும் இவ்விரு திட்டங்களும் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் தனியார் வாகனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.
கூடுதலாகப் பஸ் ஸ்மார்ட் சிலாங்கூர் (Bas Smart Selangor) சேவையை மேம்படுத்துவதுடன், பொதுமக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நடந்து செல்லக்கூடிய நடைபாதை வசதிகளை உருவாக்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பொதுமக்களின் அன்றாடப் பயணங்களை மேலும் எளிதாக்கும் நோக்கில், இத்தகைய நடவடிக்கைகள் 2027ஆம் ஆண்டுக்கான சிலாங்கூரின் வரவு செலவுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டு வருவதாகவும் இங் சீ ஹான் குறிப்பிட்டார்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளை விரிவுபடுத்துதல், நடைபாதை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பயணிகளுக்கான இணைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற முயற்சிகள் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களின் தனியார் வாகனச் சார்பைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தை அன்றாடப் பயணங்களுக்கான வசதியான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.







