ஷா ஆலாம், அக் 17 - இவ்வாரத் தொடக்கத்தில் 'மைலாப்போர்' (MyLapor) பொது சுகாதார புகார் தளம் தொடங்கப்பட்டதில் இருந்து, புகைபிடிக்கத் தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்தது மற்றும் வேப்(vape) புகைத்தது தொடர்பாக சிலாங்கூரில் அதிகபட்சமாக 358 புகார்கள் பதிவாகின.
கடந்த திங்கள் முதல் வியாழக்கிழமை வரை கோலாலம்பூர் 210 புகார்களுடன் இரண்டாவது இடத்தையும், ஜொகூர் 160 புகார்களுடன் மூன்றாவது இடத்தையும் பதிவு செய்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
'மைலாப்போர்' என்பது பொதுமக்கள் புகைபிடிக்க தடைசெய்யப்பட்ட இடங்களில் நடக்கும் விதிமீறல்களைச் சுகாதார அமைச்சிடம் புகாரளிக்க உதவும் ஒரு டிஜிட்டல் புகார் தளமாகும்.
அத்தளத்தின் மூலம் பெறப்பட்ட புகார்களில் பெரும்பாலானவை உணவகங்களில் நடந்த விதிமீறல்கள் என்றும், இவை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தின் முக்கிய கவனப் புள்ளிகளாக இருக்கும் என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
வியாழக்கிழமை மதியம் 2 மணி நிலவரப்படி, மைலாப்போர் அமைப்பு மூலம் மொத்தம் 1,113 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில், “ 471 புகார்கள் சரி செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளன. 347 புகார்கள் புதியவை, 232 புகார்கள் விசாரணையில் உள்ளன.மற்றொரு 63 புகார்கள் தீர்வு மற்றும் பின்னூட்டத்திற்காக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன" என்று அமைச்சு மேலும் கூறியது.
புகார்கள் உடனுக்குடன் கையாளப்படுவதை உறுதி செய்வதற்காக, புகாரைச் சரிபார்த்து தீர்வு காண்பதற்குச் சுகாதார அமைச்சு 48 மணி நேர இலக்கை நிர்ணயித்துள்ளது.
இருப்பினும், மிகவும் சிக்கலான புகார்களுக்குத் தீர்வு காண இரு வாரங்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் தங்களின் புகார்களை மைலாப்போர் இணையப் பக்கம் வழியாகவோ அல்லது அந்தந்த வளாகங்களில் உள்ள மைலாப்போர் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் மைசெஜேத்ரா (MySejahtera) செயலி வழியாகவோ சமர்ப்பிக்கலாம்.






