'வேப்' வழி போதைப்பொருள் பயன்பாடு: இளைஞர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவலை

7 அக்டோபர் 2026, 8:15 AM
'வேப்' வழி போதைப்பொருள் பயன்பாடு: இளைஞர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவலை
'வேப்' வழி போதைப்பொருள் பயன்பாடு: இளைஞர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவலை

ஷா ஆலாம், அக் 7: போதைப்பொருளின் தவறான பயன்பாடு தற்போது மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. குறிப்பாக வேப் (vape) பயன்பாடு உட்பட புதிய முறைகளையும் அது தற்போது உள்ளடக்கியுள்ளது.

இந்த நிலை மிகவும் கவலையளிக்கிறது என்றும், அதிகாரிகளின் தடுப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் அமலாக்கச் செயல்பாடுகள் உள்ளிட்ட மிகவும் விரிவான அணுகுமுறை இதற்குத் தேவைப்படுகிறது என சிலாங்கூரின், மலேசிய போதைப்பொருள் தடுப்பு சங்கத்தின் (பெமடாம் - PEMADAM) தலைவர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

"தற்போது போதைப்பொருள் கஞ்சா வடிவில் மட்டுமல்ல, வேப் மூலமாகவும் மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது.

தடைசெய்யப்பட்டப் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்தும் முறைகள் இப்போது பல்வேறு வகைகளாக உருவெடுத்துள்ளது. இதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

நேற்று இங்குள்ள சிலாங்கூர் மந்திரி பெசார் கழக (MBI) அலுவலகத்தில், பிளாட்ஸ் (PLATS) தொழில்முனைவோருக்கான 'சிரிம்' (SIRIM) பொட்டலம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது நஜ்வான் (வலது புறத்திலிருந்து இரண்டாவது ) படம் : மீடியா சிலாங்கூர்

தடை செய்யப்பட்டப் பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்கும் முயற்சியாக, வேப் பயன்பாடு மற்றும் அது தொடர்பான கூறுகளிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இளைஞர் பிரதிநிதிகளிடமிருந்து ஒரு முன்மொழிவு வந்திருப்பதாக இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான முகமது நஜ்வான் தெரிவித்தார்.

"நேற்று நான் சிலாங்கூர் மாநில அளவிலான தேசிய இளைஞர் ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினேன். அதில் வேப் பயன்பாடு மற்றும் அது தொடர்பான கூறுகளைத் தடை செய்ய வேண்டும் என்றும், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது மாநிலத்தின் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் ஒரு முன்மொழிவு வைக்கப்பட்டது.

இருப்பினும், இந்த பொருட்கள் இணையத் தளங்கள் மூலம் இன்னும் எளிதாகக் கிடைக்கின்றன என்பது நமக்கு இருக்கும் சவாலாகும்.

அதனால்தான் தடுக்கும் அணுகுமுறை வலுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

பள்ளிகளில் கண்காணிப்பு, திடீர் சோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் மாநில அரசு தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்புடன் (AADK) இணைந்து செயல்படுவதாகவும் முகமது நஜ்வான் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் வரை,போதைப் பொருளுக்கு அடிமையான 1 லட்சத்து 30 ஆயிரத்து 307 பேர், 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் எனவும்;

அவர்களில் பெரும்பாலோர் எஸ்பிஎம் (SPM) மற்றும் அதற்குக் குறைவான கல்வித் தகுதி கொண்டவர்கள் என்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

திரெங்கானு, கிளாந்தான், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் தேசிய விகிதமான ஒரு லட்சம் மக்களுக்கு 381 போதைப் பொருள் சம்பவங்கள் என்ற அளவைத் தாண்டி, கவலையளிக்கும் வகையில் போதைப்பொருள் பயன்பாடு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.