புத்ராஜெயா, ஜனவரி 6 – இந்த ஆண்டு வேப் பயன்பாட்டிற்குத் தடை விதிக்க சுகாதார அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது Open Pod System வேப்களில் இருந்து தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் தெரிவித்தார்.
பொது சுகாதாரத்திற்கான புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டம் 2024 (சட்டம் 852) அமலாக்கத்தில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று அவர் கூறினார். “சிகரெட் மற்றும் வேப் பயன்பாடு தொடர்பான எனது நிலைப்பாடு மாறாது. தொற்றாத நோய்கள் (NCDs) மற்றும் பாப்கார்ன் நுரையீரல் போன்ற பாதிப்புகளிலிருந்து எதிர்கால தலைமுறையைப் பாதுகாப்பது இந்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது எங்கள் பொறுப்பாகும்.
“குறிப்பாக ஓப்பன் சிஸ்டம் வேப்கள் குறித்து நான் இதற்கு முன்பு எச்சரிக்கை விடுத்துள்ளேன். பல நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றாலும், பல்வேறு செயற்கை மருந்துகளைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்யப்படும் ஓப்பன் பாட் சிஸ்டம் வேப்களுக்குத் தடை விதிப்பதே முதல் படியாகும்,” என்று இன்று தனது 2026 புத்தாண்டுச் செய்தியை வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்தத் தடை ஓப்பன் பாட் சிஸ்டம் வேப் தயாரிப்புகளின் விற்பனை மற்றும் பயன்பாடு இரண்டையும் உள்ளடக்கும் என்றும், இந்த விவகாரம் விரைவில் அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டு வரப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். மற்றொரு வளர்ச்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் பிரீமியம்-எகானமி வகுப்பு சுகாதார சேவைகளை வழங்கும் ராகான் கேகேஎம் (Rakan KKM) திட்டம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


