எல் நினோ: சிலாங்கூரின் 5 மாவட்டங்களில் திறந்த வெளி தீ ஏற்படும் அபாயம் உள்ளது

17 அக்டோபர் 2026, 2:08 AM
எல் நினோ:  சிலாங்கூரின் 5 மாவட்டங்களில்  திறந்த வெளி தீ ஏற்படும் அபாயம் உள்ளது
எல் நினோ:  சிலாங்கூரின் 5 மாவட்டங்களில்  திறந்த வெளி தீ ஏற்படும் அபாயம் உள்ளது
எல் நினோ:  சிலாங்கூரின் 5 மாவட்டங்களில்  திறந்த வெளி தீ ஏற்படும் அபாயம் உள்ளது

ஷா ஆலாம், அக் 17 : எல் நினோ நிகழ்வின் போது சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்கள், திறந்த வெளித் தீ ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக காடுகள், புதர்கள், விவசாய நிலங்கள் மற்றும் கரிநிலப் பகுதிகளில் திறந்தவெளித் தீ ஏற்படும் அபாயம் இருப்பதாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் இயக்குனர் டத்தோ வான் முகமட் ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

கோலா சிலாங்கூர் , சபாக் பெர்னாம் , கோலா லங்காட் செப்பாங் , உலு சிலாங்கூர் ஆகியவை அந்த 5 மாவட்டங்களாகும்.

"சிலாங்கூரைப் பொறுத்தவரை, நீண்டகால வறட்சி நிலவும் போது காடுகள், புதர்கள், தோட்டங்கள் அல்லது பண்ணைகள் மற்றும் கரிநிலப் பகுதிகள் கொண்ட இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் இயக்குனர் டத்தோ வான் முகமட் ரசாலி வான் இஸ்மாயில்

தற்போதைய புள்ளிவிவரங்கள் மற்றும் ஹாட்ஸ்பாட்களின் (hotspots) அடிப்படையில், கிள்ளான் , பெட்டாலிங் மற்றும் கோம்பாக் ஆகிய பகுதிகளில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களும் கவனிக்கப்பட வேண்டியவை" என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இருப்பினும், உண்மையான ஹாட்ஸ்பாட் பகுதிகளைத் தீர்மானிப்பது தற்போதைய வானிலை, மண்ணின் ஈரப்பதம், தீ விபத்து பதிவுகள் மற்றும் சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு துறையின் செயல்பாட்டு மையத்தின் கண்காணிப்பைப் பொறுத்தது என்று வான் முஹமட் ரசாலி கூறினார்.

எனவே, அடையாளம் காணப்பட்ட அபாயப் பகுதிகள் அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ள எல் நினோ காலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

3 ஆகஸ்ட் 2026 அன்று செப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதியில், சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட காட்டுத் தீயைத் தீயணைப்பு வீரர்கள் அணைக்கின்றனர். படம்: சிலாங்கூர் JBPM

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு சிலாங்கூரில் திறந்தவெளித் தீ விபத்துகள் 802 சம்பவங்களாக அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

"அவற்றில் அதிகமாக 399 சம்பங்கள் புதர் காடுகளை உட்படுத்தியது. அதே நேரத்தில் சிலாங்கூரின் தெற்கு பதியில் உள்ள ஹாட்ஸ்பாட் மண்டலங்களில் இவ்வாண்டு தீ சம்பவ எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன" என்று அவர் கூறினார்.

முன்னதாக, எல் நினோ நிகழ்வு அடுத்த ஆண்டு மத்தி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இயற்கை வள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் கூறியிருந்தார்.

மேலும் அந்த வெப்ப நிலை இம்மாதம் முதல், அடுத்தாண்டு ஜனவரி வரை 'சூப்பர்' அல்லது மிகவும் கடுமையான நிலையை அடைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

எல் நினோவுடன் ஒரே நேரத்தில் ஏற்படும் தென்மேற்கு பருவமழை காரணமாக மழையின் அளவு குறைந்து, வானிலை வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தகவலை மேற்கோள் காட்சி அவர் பேசியிருந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.