அணைக்கட்டுகளில் நீர்மட்டம் 60% கீழ் குறைந்தால் ,செயற்கை மழை பொழிவிக்கப் பரிசீலனை

24 செப்டெம்பர் 2026, 2:47 AM
அணைக்கட்டுகளில் நீர்மட்டம் 60% கீழ் குறைந்தால் ,செயற்கை மழை பொழிவிக்கப் பரிசீலனை
அணைக்கட்டுகளில் நீர்மட்டம் 60% கீழ் குறைந்தால் ,செயற்கை மழை பொழிவிக்கப் பரிசீலனை
அணைக்கட்டுகளில் நீர்மட்டம் 60% கீழ் குறைந்தால் ,செயற்கை மழை பொழிவிக்கப் பரிசீலனை
அணைக்கட்டுகளில் நீர்மட்டம் 60% கீழ் குறைந்தால் ,செயற்கை மழை பொழிவிக்கப் பரிசீலனை

ஷா ஆலாம், செப் 24 : நவம்பரில் தொடங்கும் என கணிக்கப்பட்டிருக்கும் 'சூப்பர் எல் நினோ' (Super El Nino) பருவநிலையைத் தொடர்ந்து, சிலாங்கூரில் உள்ள அணைக்கட்டுகளில் நீர்மட்டம் 60 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்தால், செயற்கை மழையைப் பொழிவிக்கும் நடவடிக்கை பரிசீலிக்கப்படும்.

தற்போது சிலாங்கூரில் உள்ள ஏழு அணைக்கட்டுகளில் நீர்மட்டம் சீராக இருப்பதாகவும், அவற்றில் ஐந்து அணைக்கட்டுகளில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான நீர் கொள்ளளவு இருப்பதாகவும் அடிப்படைக் கட்டமைப்புக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டத்தோ இர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

"இவ்வாண்டு 'சூப்பர் எல் நினோ' பசிபிக் பெருங்கடலில் கடுமையான வெப்பத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வறண்ட மற்றும் வெப்பமான வானிலையை உருவாக்குவதுடன், சில இடங்களில் கடுமையான மழையையும் ஏற்படுத்தும்.

எனவே, எங்கள் ஏழு அணைக்கட்டுகளையும் நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். ஐந்து அணைக்கட்டுகளில் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளப் போதிலும், அவை இன்னும் ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை. நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தால், அணைக்கட்டுப் பகுதிகளின் மேல்பகுதியில், மேக விதைப்பு ( clous seeding) செய்வது உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

அணைக்கட்டுகளின் நீர்மட்டம் 60 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்து ஆபத்தான நிலையை எட்டும்போது இந்த நடவடிக்கை எடுக்கப்படும். காற்று போன்ற பிற காரணங்களின் தாக்கங்கள் இருப்பதால், மேக விதைப்பைச் செயல்படுத்துவது எளிதானது அல்ல. இருந்தாலும் இதுகுறித்து பரிசீலிப்போம்," என்று அவர் மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக மழை பெய்தபோதிலும், அது அணைக்கட்டுகள் அமைந்துள்ள பகுதிகளில் பெய்யவில்லை என்று இஷாம் கூறினார்.

"தற்போதைய நிலவரப்படி, சுங்கை லங்காட் (Sungai Langat) அணைக்கட்டு இன்னும் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான கொள்ளளவுடன் உச்ச மட்டத்தில் உள்ளது.

இருப்பினும், உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டு இறுதியில் தொடங்கவிருக்கும் 'சூப்பர் எல் நினோ' கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட வானிலையைக் கொண்டுவரக்கூடும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

அனைத்துலக கண்காணிப்பு, ஆராய்ச்சி மையங்களின் பருவநிலை கணிப்புகளின்படி, இந்த நிகழ்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 100 விழுக்காட்டை நெருங்கியுள்ளதாக அத்துறை தெரிவித்தது.

இந்த நிலைமையால் தீபகற்ப மலேசியாவின் வடக்கு மற்றும் உள்நாட்டுப் பகுதிகள், மற்றும் சபா, சரவாக்கின் உள்நாட்டுப் பகுதிகள் வழக்கத்தை விட அதிக வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும், ஜனவரி முதல் மே 2027 வரை வடகிழக்கு பருவமழையின் இறுதிக்கட்டத்தில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் ஏற்படும் அபாயத்தையும் இது அதிகரிக்கும்.

இத்துடன், வெப்பமான மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ மற்றும் புகைமூட்டம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்று மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.