கோலாலம்பூர், செப் 9 : அடுத்தாண்டு நாட்டின் சில பகுதிகளில் வெப்பம் 40 பாகை செல்சியசைத் தாண்டுமென மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
எல் - நினோ வெயில் அதன் தீவிரத்தை எட்டுமென கணிக்கப்பட்டதை அடுத்து, அந்த தட்ப வெப்ப நிலை கணிப்பை அத்துறை வெளியிட்டிருக்கிறது.
தீபகற்பத்தின் வட மாநிலங்களில், மார்ச் மாதத்திலிருந்து ஏப்ரல் மாத இடையிலான கால கட்டத்தில் இந்த அதீத வெப்பத்தை மக்கள் உணர்வார்கள் என, மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மொஹமட் ஹிஷாம் மொஹ்ட் அனிப் தெரிவித்தார்.
நாட்டின் இதுவரை மிக உயர்வாக பதிவான வெயிலின் தட்ப வெப்ப நிலை 40.1 பாகை செல்சியசாகும். 1997/98 ஆம் ஆண்டுவாக்கில் சூப்பர் எல்-நினோ காலத்தின் போது பெர்லிஸ் ஜூபிங்கில் ( Chuping) அந்த சுட்டெரிக்கும் வெயில் பதிவானது.
தற்போதைய உலகளாவிய வெப்பமயமாதலை கருத்தில் கொண்டும், அந்த பழைய வெயில் பதிவைத் தாண்டுவது சாத்தியமே என மொஹமட் ஹிஷாம் குறிப்பிட்டார்.
பெர்னாமா வானொலி தயாரிப்பிலான சூப்பர் எல்-நினோ தலைப்பை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டு, அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அடுத்தாண்டு, முஸ்லீம்கள் வெயில் கால கட்டத்தில் நோன்பிருப்பதோடு பெருநாளையும் கொண்டாடவிருக்கின்றனர். எனவே, உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, தீபகற்பத்தின் வடப் பகுதியான லங்காவி, அலோர் ஸ்டார் போன்ற பகுதிகளில் 70 நாட்கள் வரை மழையே இல்லாத வறண்ட வானிலை நீடித்தது.
இதே நிலை மீண்டும் திரும்பலாம். எனவே, பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






