பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 17 : எல் நினோ காலநிலை மாற்றம் வலுவடைந்து வருவதால், வழக்கத்தை விட முன்கூட்டியே கடுமையான வெப்பமும் நீண்ட வறட்சியும் நாட்டில் ஏற்படக் கூடுமென மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
அக்டோபர் மாதம் முதல் இந்த காலநிலை மாற்றம் கடுமையான நிலையை எட்டுவதற்கு 81 விழுக்காடு வாய்ப்புகள் உள்ளன.
மேலும், இந்தச் சூழல் இவ்வாண்டின் இறுதி வரை நீடிக்கக்கூடும் என்றும் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும் எல் நினோ நீடிப்பதற்கு 97 விழுக்காடு வாய்ப்புகள் உள்ளதாகவும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.
அடுத்த ஆண்டு ஜனவரி வரையிலான வானிலை முன்னறிவிப்பின்படி நாட்டின் பல பகுதிகளில் வழக்கமான அளவை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும்.
குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள், மத்திய மற்றும் மேற்கு சரவாக் மற்றும் கிழக்கு சபா ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் எல் நினோவின் வளர்ச்சியால் மழைப்பொழிவு குறைவு அதன் உச்சத்தை எட்டும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.
வறண்ட வளிமண்டல சூழல் மற்றும் குறைவான மழைப்பொழிவு காரணமாக வழக்கமான ஆண்டுகளை விட இம்முறை புகை மூட்டத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
குறிப்பாகக் கட்டுப்பாடற்ற திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகள் நடந்தால் உள்ளூர் மற்றும் எல்லை தாண்டிய புகைமூட்ட அபாயம் ஏற்படும் என்று வானிலை ஆய்வுத் துறை தனது நீண்டகால வானிலை முன்னறிவிப்பில் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வுத் துறையின் வறட்சி கண்காணிப்பு அறிக்கையின்படி நெகிரி செம்பிலான், மலாக்கா, தெற்கு பகாங், ஜொகூர் மற்றும் சரவாக்கின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மழைப்பொழிவு 35 விழுக்காட்டிற்கும் அதிகமாகக் குறையக்கூடும்.
தெற்கு ஜொகூர் மற்றும் சரவாக்கின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் செப்டம்பர் மாதம் வரை வறண்ட சூழல் நிலவக்கூடும் என்றும், கிழக்கு சபாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இதேபோன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சபா மாநிலத்தில் நீண்ட நாட்களுக்கு மழை இல்லாததால் அங்கு கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் குறித்தும் வானிலை ஆய்வுத் துறை எச்சரித்தது.
இந்த சூப்பர் எல் நினோ தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசியாவின் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை இதற்கு முன்பு குறிப்பிட்டிருந்தது.
இது தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான புகைமூட்டம், குடிநீர் பற்றாக்குறை மற்றும் விமான நிலையத் தடங்கல்களை ஏற்படுத்திய 1997 முதல் 1998 -ஆம் ஆண்டின் தீவிர எல் நினோ காலக்கட்டத்துடன் ஒப்பிடப்படுகிறது.
அந்த வரலாற்றுப் பாதிப்பின் போது 1998 ஏப்ரல் 9-ஆம் தேதி பெர்லிஸின் சூப்பிங் பகுதியில் மலேசியாவின் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பநிலையான 40.1 பாகை செல்சியஸ் பதிவாகியிருந்தது.
இது தொடர்பாக வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் பேசுகையில், பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்லும்போது தீவிரமான புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.






