ஜார்ஜ் டவுன்,அக் 8 -இவ்வாண்டின் இறுதியிலிருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால், கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ள அரசாங்கம் ஆரம்பக்கட்ட தயார் நிலைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த எதிர்பாராத வானிலை மாற்றங்களைக் கையாள்வதற்கான சிறந்த வழிகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI), அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனைகளைத் தமது அமைச்சு நாடி வருவதாக விவசாயம் - உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.
நீடித்த வெப்ப -வறண்ட வானிலை ஏற்படும் போது அரசாங்கமும் மக்களும் பீதியடையாமல் இருப்பதை உறுதி செய்ய முன்கூட்டியே தயாராவது அவசியமென, நேற்று இங்கு நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் தெரிவித்தார்.
வறட்சியால் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறை, பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத் துறையைப் பாதிக்கலாம் என்பதால், இதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று முகமட் சாபு குறிப்பிட்டார்.
இதற்கிடையில், எல் நினோ (El Nino) சவால்களைக் கருத்தில் கொண்டு, நாளை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள 2027 வரவுசெலவுத் திட்டத்தில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"அடுத்த ஆண்டு நாம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்களில் ஒன்றாக எல் நினோ இருப்பதால், விவசாய அமைச்சுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
நீடித்த வெப்பமான வானிலையால் நாட்டின் விவசாயத் துறையும் உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, நீர் விநியோகப் பிரச்சினைக்கு முன்கூட்டியே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.







