காற்று மாசுக் குறியீடு (API) 200ஐத் தாண்டினால் பள்ளிகள் மூடப்பட வேண்டும் – சுகாதார அமைச்சு

16 அக்டோபர் 2026, 3:16 PM
காற்று மாசுக் குறியீடு (API) 200ஐத் தாண்டினால் பள்ளிகள் மூடப்பட வேண்டும் – சுகாதார அமைச்சு

புத்ராஜெயா, அக்.16 – காற்று மாசுக் குறியீடு (API) 200ஐத் தாண்டினால், பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் (TASKA) உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட வேண்டும் எனச் சுகாதார அமைச்சு (MOH) அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளையில், காற்று மாசுக் குறியீடு மிகவும் ஆரோக்கியமற்ற 201 முதல் 300 வரையிலும், அபாயகரமான நிலையான 300க்கு அதிகமாகவும் பதிவாகும்போது, அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சு தெரிவித்தது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில், அதாவது API 101 முதல் 200 வரை பதிவாகும்போது, கல்வி நிலையங்கள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் நடைபெறும் புறப்பாட நடவடிக்கைகள், வெளிப்புற உடற்பயிற்சிகள் உள்ளிட்ட செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வெளிப்புறங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முதலாளிகள் N95 வகை முகக்கவசங்களை வழங்க வேண்டும். பொதுமக்களும் வெளியில் செல்லும்போது இத்தகைய முகக்கவசங்களை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மாசடைந்த காற்றைத் தொடர்ந்து சுவாசிப்பது உடல்நலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சுவாசப் பிரச்சனைகள் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அதிக ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய பிரிவினருக்கு இதனால் பாதிப்புகள் ஏற்படலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடும் அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

புகைமூட்டம் நீடித்து வரும் நிலையில், காற்றின் தரக் குறியீட்டுக்கு ஏற்ப கல்வி நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.