கோலாலம்பூர், அக்.16: சிலாங்கூரில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவையான DRT தோல்வியடைந்துவிட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹா ஹான் மறுத்துள்ளார்.
அதேவேளையில், இச்சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கும், தடையின்றி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் போதிய வேன்கள் இல்லாதது முக்கியத் தடையாக இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
புதிய வேன்கள் வந்தடைந்ததும் சேவையை விரிவுபடுத்த முடியும் எனக் குறிப்பிட்ட அவர், பிரசாரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனம் கூடுதல் வேன்களின் வருகைக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிலாங்கூர் சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டை (SIBS) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் போக்குவரத்து கருத்தரங்கின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இங் சீ ஹான் இதனைத் தெரிவித்தார்.
அந்நிகழ்வில் பங்கேற்ற ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், 2024ஆம் ஆண்டு DRT சேவை தொடங்கப்பட்டதிலிருந்து அதைப் பயன்படுத்தி வருவதாகக் கூறிய அந்தப் பங்கேற்பாளர், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை மற்றும் இலக்கைச் சென்றடைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பது குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதற்குப் பதிலளித்த இங் சீ ஹான், தற்போது நடைமுறையில் உள்ள வழித்தடங்களில் பயணிகளுக்குச் சேவை வழங்குவதற்குப் போதுமான வாகனங்கள் இல்லாததால் சேவையை அடிக்கடி கட்டுப்படுத்துவதாக விளக்கினார்.
வேன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் சேவையின் செயல்திறனையும் விரிவுபடுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சிலாங்கூரில் முன்னோட்டத் திட்டமாகச் செயல்படுத்தப்பட்ட DRT சேவையிலிருந்து திரட்டப்பட்ட தரவுகள், மாநிலத்தின் போக்குவரத்துத் தேவைகளுக்கு இம்முறை பொருத்தமானதாக இருப்பதைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பயணிகள் தங்கள் வீடுகள் அல்லது இருப்பிடங்களிலிருந்து பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கியப் போக்குவரத்து மையங்களைச் சென்றடைவதற்கும், அங்கிருந்து தங்களது இறுதி இலக்கை அடைவதற்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.







