லெம்பா ஜெயா மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற 'DRT' வேன் சேவை

15 மே 2026, 3:02 AM
லெம்பா ஜெயா மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற 'DRT' வேன் சேவை

ஷா ஆலம், மே 15 – லெம்பா ஜெயா தொகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'தேவைக்கேற்ப விரைவுப் போக்குவரத்து' எனப்படும் DRT (Demand Responsive Transit) வேன் சேவை, அப்பகுதி மக்களிடையே, குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது குறித்துச் சிலாங்கூர் ஊடகத்தின் (Media Selangor) 'SKOP' நிகழ்ச்சியில் பேசிய லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சையத் அகமட் சையத் அப்துல் ரஹ்மான் அல்-ஹடாத் (அல்டிமேட்), இந்தப் போக்குவரத்து சேவை ஜாலான் அம்பாங்கின் இறுதிவரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாகப் பங்சாபுரி டேசா லெம்பா பெர்மாய் மற்றும் தாமான் நூரி ஜெயா போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பயனுள்ளதாக அமைந்துள்ளது.

"இந்தச் சேவையின் கட்டணம் மிகக் குறைவாகவும் கட்டுப்படியாகக்கூடியதாகவும் இருப்பதை மக்கள் உணர்ந்தவுடன், இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. மக்களிடமிருந்து வரும் கருத்துகளும் மிகவும் நேர்மறையாக உள்ளன," என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமின்றி, மக்களிடையே சமூக ஒற்றுமையையும் வளர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார். "ஒரே நேரத்தில் வேலைக்குச் செல்லும் குடியிருப்பாளர்கள் ஒன்றாக இணைந்து இந்த வேன் சேவையை முன்பதிவு செய்கின்றனர்.

இதனால், ஒரே குடியிருப்பில் வசித்தும் ஒருவரையொருவர் அறிமுகமில்லாமல் இருந்த அண்டை வீட்டார், இப்போது நண்பர்களாக மாறி வருகின்றனர்," என அவர் சுட்டிக்காட்டினார்.

DRT வேன் சேவை என்பது அதிக மக்கள் நெரிசல் கொண்ட மற்றும் குறுகிய சாலைகள் உள்ள பகுதிகளில் 'ஸ்மார்ட் சிலாங்கூர்' பேருந்துகளுக்கு மாற்றாக மாநில அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு நவீனத் திட்டமாகும்.

2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளையின் (MBI) கீழ் செயல்படுத்தப்பட்டு, சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தினால் (Sidec) கண்காணிக்கப்படுகிறது.

சிலாங்கூர் மாநில அரசின் திறனை வலுப்படுத்தும் தொகுப்புத் திட்டத்தின்' கீழ், சுமார் 50,000 குடிமக்களுக்கு மாதந்தோறும் 30 ரிங்கிட் வீதம் ஆறு மாதங்களுக்குப் போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதற்காக 10.4 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகையானது DRT வேன், பேருந்து மற்றும் இரயில் சேவைகளைப் பயன்படுத்தும் மக்களின் தினசரி பயணச் செலவைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.