ஜகார்த்தா, அக் 15 - இந்தோனேசியாவின் மத்திய கலிமந்தான் மற்றும் தெற்கு சுமத்ரா ஆகிய மாகாணங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 17,000 பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அடர்ந்த புகைமூட்டம் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதோடு, மோசமான பார்வைத்திறன் காரணமாக வான்வழித் தீயணைப்பு நடவடிக்கைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மோசமான பார்வைத்திறன் காரணமாக ஹெலிகாப்டர் மூலமான வான்வழித் தீயணைப்பு நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது தரைவழிச் செயல்பாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது என தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பின் தரவு மற்றும் தகவல் பிரிவின் இடைக்கால தலைவர் பெர்டன் பஞ்சாய்தன் தெரிவித்தார்.
அக்டோபர் 13 நிலவரப்படி மத்திய கலிமந்தானில் உள்ள தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 521.69 ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுத்தீ அணைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாலெம்பாங் பகுதியில் நிலவும் அடர்ந்த புகைமூட்டத்தைக் குறைத்து பார்வைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், தாய்லாந்தின் ஒத்துழைப்போடு 1.5 டன் உலர் பனிக்கட்டிகளைத் தூவும் சோதனை முயற்சிக்கு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் மற்ற மாகாணங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.







