எல்லை கடந்த புகைமூட்டம் இரு வாரங்களில் தணியும் ; துணையமைச்சர்

13 அக்டோபர் 2026, 12:40 PM
எல்லை கடந்த புகைமூட்டம்  இரு வாரங்களில் தணியும் ; துணையமைச்சர்
எல்லை கடந்த புகைமூட்டம்  இரு வாரங்களில் தணியும் ; துணையமைச்சர்

கோலாலம்பூர், அக் 13 : காற்று வீசும் திசை மாறுவதால், கடந்த ஆகஸ்ட் 8 முதல் மலேசியாவைப் பாதித்து வரும் எல்லை கடந்த புகைமூட்டம் அடுத்த இரு வாரங்களில் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இயற்கை வள சுற்றுச்சூழல் துணையமைச்சர் சயிட் இப்ராஹிம் சயிட் நோ தெரிவித்தார்.

மலேசியா கடந்த அக்டோபர் 9 -ஆம் தேதி பருவமழை கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், வானிலை மாற்றம் மட்டுமே இதற்கு நீண்டகால தீர்வாகாது என்று அவர் வலியுறுத்தினார். புகைமூட்டம் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதன் மூல காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண வேண்டுமென்றாவர்.

இதற்காக உள்நாட்டுச் சட்ட அமலாக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும் அபாயத்தைக் குறைக்க வட்டாரத்துவ ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், மக்களவை சிறப்பு கூட்டத்தின் போது அவர் தெரிவித்தார்.

பொது சுகாதாரம், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மக்களின் நலனைப் பாதிக்கும் ஒரு தேசிய நெருக்கடியாக இந்த புகைமூட்டம் உருவெடுத்துள்ளதாக , கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கு போய் தியோங் - வெளிப்படுத்திய கவலை குறித்து துணையமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.

இந்தோனேசியாவின் கலிமந்தான் மற்றும் சுமத்ரா உள்ளிட்ட பல பகுதிகளில் காடு மற்றும் நிலப்பரப்புகளில் ஏற்பட்ட தீ விபத்துகளின் அதிகரிப்பு காரணமாகவே இந்த புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது மலேசியாவின், குறிப்பாக சரவாக் மாநிலத்தின் காற்றின் தரத்தைப் பாதித்துள்ளதாகவும் துணையமைச்சர் கூறினார்.

இவ்விவகாரத்தில் சட்டத்தை அமல்படுத்த, மாசுபாட்டின் மூலத்தைக் கண்டறிவதற்கும் அதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்கும் போதுமான ஆதாரங்களைப் பெறுவதே முக்கிய சவாலாக இருப்பதாக அவர் விளக்கினார்.

மேலும், இந்தோனேசியாவில் நிகழ்ந்திருக்கும் திறந்தவெளி எரிப்புச் சம்பவங்களில் மலேசிய நிறுவனங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடமிருந்தோ தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சிடமிருந்தோ இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்றும் துணையமைச்சர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.