பாலாங்கா ராயா, அக்.27 - இந்தோனேசியா, பாலாங்கா ராயா நகரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட சிறப்புப் பேருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மத்திய கலிமந்தான் மாகாணத்தின் தலைநகரான பாலாங்கா ராயாவில் நச்சுப் புகையினால் மக்களுக்கு சுவாச நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
இதனை எதிர்கொள்ள உள்ளூர் அரசாங்கம், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் தகுதிவாய்ந்த மருத்துவப் பணியாளர்களைக் கொண்ட ஒரு சிறப்பு "ஆக்சிஜன் பேருந்தை" களமிறக்கியுள்ளது.
காற்றில் மாசு அதிகரித்து மூச்சுவிட சிரமப்படும் பொதுமக்கள் இந்த வெள்ளை- நீல நிற பேருந்திற்குள் வந்து, சிறிய குழாய் மூலம் தங்களின் மூக்கில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை தூய்மையான ஆக்சிஜனை சுவாசித்து தற்காலிக நிவாரணம் பெற்றுக் கொள்கின்றனர்.
ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் நிலவும் இந்தச் சூழலில், அவசர ஆக்சிஜன் உதவி தேவைப்படும் மக்களுக்கு உடனடியாகச் சேவை செய்வதே இதன் நோக்கம் என்று மாகாண சுகாதாரத் துறை தெரிவித்தது.
பேருந்தில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்றுக் கொண்ட 44 வயதான ஒக்டாவினா என்ற பெண்மணி , "இது இயற்கை பேரழிவு, இதனால் எங்களால் செய்யக்கூடியது என்று எதுவும் இல்லை" என வேதனையுடன் தெரிவித்தார்.
மற்றொரு குடியிருப்பாளரான யுதா, இந்த பேருந்திற்கு வரும் பெரும்பாலான மக்கள் கடுமையான இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகவே வருகிறார்கள் என்றார்.
31 வயதான பூர்ணசாரி என்ற பெண், "காலை முதலே மஞ்சள் நிறத்தில் தடிமனான புகை சூழ்ந்துள்ளதால், வீட்டை விட்டு வெளியே வந்தாலே நெஞ்சு இறுக்கமும் இருமலும் ஏற்படுகிறது" என்று தனது பாதிப்பை விவரித்தார்.
தற்போது இந்தோனேசியாவின் காற்று மாசு குறியீடு சில பகுதிகளில் 1,000-க்கும் அதிகமாகப் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இந்த குறியீடு 300-ஐத் தாண்டினாலே அது மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் 'அபாயகரமானது' என்று வகைப்படுத்தப்படும் சூழலில், தற்போதைய நிலைமை மிக மோசமாக உள்ளது.







