
ஹூலு சிலாங்கூர், அக் 15 - உலு சிலாங்கூரில், உள்ளூர் மக்கள் நகரங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கொமுட்டர் இரயில் நிலையங்களுக்குச் செல்வதற்கு ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து (Bas Smart Selangor) சேவை இன்னும் ஒரு முக்கியத் தேவையாகத் தொடர்ந்து நீடிக்கிறது.
அந்த இலவசப் பேருந்து சேவை, கடந்த 10 ஆண்டுகளில் இம்மாவட்டத்தில் சுமார் 16 லட்சம் பயணிகளைப் பதிவு செய்திருப்பதாக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் (MPHS) தலைவர் ஜுலைஹா ஜமாலுதீன் தெரிவித்தார்.

தற்போதைய மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புதிய நகரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தற்போதைய வழித்தடங்களை விரிவுபடுத்தவும் திட்டங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குடியிருப்புப் பகுதிகளை முக்கிய இடங்களுடன் இணைப்பதில் இப்பேருந்து சேவை உலு சிலாங்கூர் பொதுப் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக விளங்குகிறது.
தற்போதைய நிலையில் மாணவர்களும் இல்லத்தரசிகளும் இதன் முதன்மைப் பயனர்களாக உள்ளனர்.
ஐந்து பேருந்துகளைக் கொண்டு ஐந்து வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தினமும் சுமார் 10 பயணங்களை மேற்கொள்ளும் இப்பேருந்துகள், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து பொதுப் போக்குவரத்து வசதியை எளிதாகப் பெறுவதை உறுதி செய்கின்றன.

எனினும், உலு சிலாங்கூர் மாவட்டத்தின் கட்டமைப்பு பரவலாகவும் பரந்த பரப்பளவிலும் அமைந்துள்ளதால், கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளதாக ஜுலைஹா ஒப்புக்கொண்டார்.
குறிப்பாக அஞ்சாங் உத்தாரா பகுதியில் உள்ள பெல்டா குடியிருப்புப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது கோலா குபு பாரு, பத்தாங் காலி மற்றும் புக்கிட் செந்தோசா போன்ற மக்கள் அதிகமுள்ள பகுதிகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஐந்து வழித்தடங்களை இயக்குவதற்கு தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் செலவாகிறது. எனவே, புதிய பேருந்துகளைச் சேர்ப்பதும், வழித்தடங்களை விரிவுபடுத்துவதும் மக்களின் தேவையையும் பயன்பாட்டையும் பொறுத்தே அமையும் என்றாரவர்.
அதே வேளையில், எதிர்கால பொதுப் போக்குவரத்து திட்டமிடலில், பண்டார் செரண்டா 'கிழக்குக் கடற்கரை இரயில் இணைப்பு' (ECRL) திட்டத்தையும் ஹுலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் கருத்தில் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய வழித்தடங்கள் ஏற்கனவே அப்பகுதியை உள்ளடக்கியுள்ளதால், எதிர்காலத்தில் அந்த இரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது பேருந்துகளின் எண்ணிக்கையும் மற்றும் அதன் சேவையும் அதிகரிக்கப்படும்.
இது தவிர, இப்பகுதியில் பொதுப் போக்குவரத்து இணைப்பை முழுமையாக்குவதற்கு 'தேவைக்கேற்ப இயங்கும் போக்குவரத்து' (Demand-Responsive Transit - DRT) முறையும் ஒரு சிறந்த தேர்வாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
உலு சிலாங்கூரில் இன்னும் இந்த சேவை தொடங்கப்படவில்லை என்றாலும், மக்கள் தொகையும் தொழில்துறை வளர்ச்சியும் வேகமாக அதிகரித்து வரும் புக்கிட் செந்தோசா மற்றும் புக்கிட் பெருந்தோங் ஆகிய பகுதிகளில் இதனைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என ஜுலைஹா கூறினார்.








