வலுக்கும் அதிருப்தி: காட்டுத்தீயை ஒடுக்க கூடுதல் வளங்களைத் திரட்ட இந்தோனேசிய அதிபர் ஆணை

13 அக்டோபர் 2026, 3:41 PM
வலுக்கும் அதிருப்தி: காட்டுத்தீயை ஒடுக்க கூடுதல் வளங்களைத் திரட்ட இந்தோனேசிய அதிபர் ஆணை

ஜகார்த்தா, அக் 13: அண்டை நாடுகளிலும் மோசமான புகைமூட்டத்தை ஏற்படுத்தியுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த கூடுதல் வளங்களைத் திரட்டுமாறு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ உத்தரவிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் காட்டுத் தீயைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசிய அதிபர் பிரபோவோ, நாடு முழுவதும் தீயணைப்புப் பணிகளை வலுப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் இது தங்களது முதன்மையான முன்னுரிமை என்றும், இதனை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 'எல் நினோ' தாக்கத்தால் ஏற்பட்டுள்ள இந்தக் கடுமையான காட்டுத்தீயினால் இவ்வட்டாரத்தில் சுவாச நோய்கள் தீவிரமடைந்துள்ளன.

படம் : ராய்ட்டர்ஸ் ( REUTERS)

இதன் காரணமாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் காற்றின் தரம் மோசமடைந்து கடந்த சில வாரங்களாகப் பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஒரு மாதமாக உலகிலேயே இந்தோனேசிய காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகை வெளியேற்றம் தான் மிக அதிகமாக இருப்பதோடு, கடந்த ஏழு நாட்களில் உலகளாவிய ஒட்டுமொத்த புகையில் பாதியளவு இங்கிருந்தே உருவாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது.

படம் : ராய்ட்டர்ஸ் ( REUTERS)

மலேசியாவும் சிங்கப்பூரும் இந்தோனேசியாவிற்கு உதவ முன்வந்துள்ள போதிலும், வெளிநாட்டு உதவிகளை ஏற்பது குறித்தோ காட்டுத் தீயை தேசியப் பேரிடராக அறிவிப்பது குறித்தோ இன்னும் ஆலோசிக்கவில்லை என்று இந்தோனேசிய அரசியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் டூடுங் அப்துரச்மான் தெரிவித்தார்.

தாங்களே தற்போதைய நிலையைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த எல்லை கடந்த புகைமூட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதால் ஜகார்த்தாவிற்கு வட்டாரத்துவ அழுத்தம் அதிகரித்துள்ளது.

படம்: ராய்ட்டர்ஸ் (REUTERS)

இந்த நெருக்கடிக்கு நடுவே, தாங்கள் புகைமூட்டத்தை மட்டும் அனுப்பவில்லை என்றும் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்குத் தேவையான ஆக்சிஜனும் தங்கள் காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது என்றும் இந்தோனேசியாவின் தகவல் தொடர்பு அமைப்பின் தலைவர் ஷாகண்டா நைங்கோலனின் சர்ச்சைக்குரிய கருத்து, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.