ஷா ஆலாம், அக். 12 – புகைமூட்டத்தால் சிலாங்கூரில் நான்கு மாவட்டக் கல்வி அலுவலகங்களின் (PPD) கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் நாளை, அக்டோபர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மூடப்படும் எனக் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
இந்த உத்தரவு உலு லங்காட், பெட்டாலிங் பெர்டானா, கோலா லங்காட் மற்றும் செப்பாங் ஆகிய மாவட்டக் கல்வி அலுவலகங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளை உள்ளடக்கியதாகும்.
புகைமூட்டம் காரணமாக மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சிலாங்கூரின் பிற மாவட்டக் கல்வி அலுவலகங்களின் கீழ் இயங்கும் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என ஃபட்லினா கூறினார்.
சிலாங்கூரைத் தவிர, ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
புகைமூட்டப் பாதிப்பு நீடிக்கும் நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.







