இந்தோனேசியா செமேரு எரிமலை 10 முறை வெடிப்பு: 900 மீட்டர் உயரத்துக்கு சாம்பல் வெளியேற்றம்

13 அக்டோபர் 2026, 8:50 AM
இந்தோனேசியா செமேரு எரிமலை 10 முறை வெடிப்பு: 900 மீட்டர் உயரத்துக்கு சாம்பல் வெளியேற்றம்

ஜகார்த்தா, அக். 13 – இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் அமைந்துள்ள செமேரு எரிமலை இன்று செவ்வாய்க்கிழமை குறைந்தது 10 முறை வெடித்ததில், அதன் உச்சியிலிருந்து 900 மீட்டர் உயரம் வரை எரிமலைச் சாம்பல் வெளியேறியுள்ளது.

இந்தோனேசியாவின் எரிமலை ஆய்வு மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு மையம் (PVMBG) வெளியிட்ட தகவலின் அடிப்படையில், உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.09 மணி முதல் பிற்பகல் 1.11 மணி வரை இந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதனால் வெளியேறிய சாம்பல் மேகங்கள் தென்மேற்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கிப் பரவின.

அதிகபட்சமாக, காலை 5.20 மணி மற்றும் 6.47 மணிக்கு நிகழ்ந்த வெடிப்புகளின்போது எரிமலையின் உச்சியிலிருந்து 900 மீட்டர் உயரத்துக்குச் சாம்பல் மேகங்கள் எழுந்தன.

இது கடல் மட்டத்திலிருந்து 4,576 மீட்டர் உயரத்தை எட்டியதாக அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எரிமலையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெசுக் கோபோகான் ஆற்றை ஒட்டிய 13 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பொதுமக்கள் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என PVMBG எச்சரித்துள்ளது.

அப்பகுதியில் எரிமலையிலிருந்து அதிவேகமாகப் பாயக்கூடிய சூடான வாயு, சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், அத்துடன் எரிமலைச் சாம்பல் மற்றும் குப்பைகளுடன் கலந்த சேற்றுப் பெருக்கு (Lahar) ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

எரிமலைச் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளைப் பின்பற்றி, அபாயப் பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.