இந்தோனேசியாவில் செமேரு எரிமலை ஒரே நாளில் நான்கு முறை வெடித்துச் சிதறியது

12 மார்ச் 2026, 7:00 AM
இந்தோனேசியாவில் செமேரு எரிமலை ஒரே நாளில் நான்கு முறை வெடித்துச் சிதறியது

ஜகார்த்தா, மார்ச் 12 – இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற செமேரு எரிமலை இன்று ஒரே நாளில் நான்கு முறை வெடித்துச் சிதறியது.

லுமாஜாங் மற்றும் மாலாங் மாவட்ட எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த எரிமலை, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் தொடர்ச்சியாகச் சீறி வருவதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முதல் வெடிப்பு இந்தோனேசிய நேரப்படி நள்ளிரவு 12.27 மணிக்குத் தொடங்கியதாகச் செமேரு எரிமலை கண்காணிப்பு நிலையத்தின் அதிகாரி லிஸ்வாந்தோ தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த நான்கு நிமிடங்களிலேயே, அதாவது 12.31 மணிக்கு இரண்டாவது முறையும் எரிமலை வெடித்தது.

எனினும், நள்ளிரவு நேரம் என்பதால் அப்போது வெளியேறிய சாம்பல் மேகங்களின் அடர்த்தியைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அதிகாலை 5.28 மணியளவில் நிகழ்ந்த மூன்றாவது வெடிப்பின்போது, எரிமலையின் உச்சியிலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்திற்கு அடர்ந்த சாம்பல் மேகங்கள் வான்நோக்கிச் சீறிப் பாய்ந்தன. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,276 மீட்டர் உயரம் வரை பரவியிருந்தது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

பின்னர், சரியாக 5.46 மணிக்கு நான்காவது முறையாக எரிமலை மீண்டும் வெடித்ததில், சுமார் 300 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் மேகங்கள் வெளியேறியதாக அன்தாரா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலையில், செமேரு எரிமலை 'நிலை 3' எனும் விழிப்புணர்வு மட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், எரிமலையின் தென்கிழக்கு திசையில் உள்ள பெசுக் கோபோகன் பகுதியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் பொதுமக்கள் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என இந்தோனேசிய எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு மையம் (PVMBG) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், எரிமலையிலிருந்து வெளியேறக்கூடிய வெப்ப மேகங்கள், உருகிய எரிமலைக் குழம்புகள் மற்றும் ஆறுகளில் பாயக்கூடிய லாகர் எனப்படும் எரிமலைச் சேற்றுப் பிரவாகம் குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக எரிமலையிலிருந்து உற்பத்தியாகும் நதிப் படுகைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.