ஜகார்த்தா, ஏப்ரல் 6 – இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற செமேரு எரிமலை (Gunung Semeru), இன்று திங்கட்கிழமை காலை மட்டும் அடுத்தடுத்து ஏழு முறை வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த எரிமலைச் சீற்றத்தினால் எழுந்த சாம்பல் படலம், மலை உச்சியிலிருந்து சுமார் 300 மீட்டர் முதல் 1,100 மீட்டர் உயரம் வரை வான்நோக்கிப் பாய்ந்தது.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.38 மணியளவில் பதிவான முதல் வெடிப்பின் போது சாம்பல் 1,000 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. அதனைத் தொடர்ந்து காலை 6.51 மணியளவில் நிகழ்ந்த மிகப்பெரிய வெடிப்பின் போது சாம்பல் படலம் 1,100 மீட்டர் உயரத்தை எட்டியது.
காலை 9.29 மணியளவில் ஏழாவது முறையாக வெடிப்பு நிகழ்ந்தாலும், அப்போது சாம்பல் புகையைத் தெளிவாகக் காண முடியவில்லை என செமேரு எரிமலை கண்காணிப்பு அதிகாரி லிஸ்வாந்தோ தெரிவித்துள்ளார். தற்போது இந்த எரிமலை மூன்றாம் நிலை எச்சரிக்கை மட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், வடக்கு ஹல்மஹேராவில் உள்ள டுகோனோ எரிமலையும் (Gunung Dukono) இன்று காலை வெடித்து சிதறியது. இதன் காரணமாக மலை உச்சியிலிருந்து 1,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் வெளியேறியது. கடந்த ஏழு மாதங்களாகச் சீற்றம் இன்றி காணப்பட்ட இந்த எரிமலை, மார்ச் 30 முதல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளதாகக் கண்காணிப்பு அதிகாரி பம்பாங் சுகியோனோ தெரிவித்துள்ளார்.
சுமார் 49 வினாடிகள் நீடித்த இந்த வெடிப்பின் போது வெளியேறிய வெண்மை மற்றும் சாம்பல் நிறப் புகையானது தடிமனாக மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,087 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை தற்போது இரண்டாம் நிலை எச்சரிக்கையில் உள்ளது.
பாதுகாப்பு கருதி, மாலுபாங் வாரிராங் பள்ளத்தைச் சுற்றியுள்ள நான்கு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நுழைய வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
காற்றின் திசை மற்றும் வேகத்திற்கு ஏற்ப சாம்பல் பரவும் பகுதிகள் மாறக்கூடும் என்பதால், சுவாசப் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளப் பொதுமக்கள் முகக்கவசங்களை அணியுமாறு அவசர கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








