ஷா ஆலாம், அக். 13 – சிலாங்கூரில் மக்கள் மலிவு விலையில் சொந்த வீடுகளை வாங்க 2028ஆம் ஆண்டுக்குள் 200,000 ருமா சிலாங்கூர் கூ வீடுகளை வழங்கும் இலக்கை மாநில அரசு எட்டும் என மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.
இதுவரை 57,000 ருமா சிலாங்கூர் கூ வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, அவற்றின் சாவிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 34,000 வீடுகள் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளன என்றும் அவர் கூறினார்.
மொத்தமாக, சுமார் 1,74,000 வீடுகள் பல்வேறு கட்டங்களில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எஞ்சிய வீடுகளுக்கான திட்டமிடல் அனுமதிகளைப் பெறும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மலேசிய மாநிலங்களின் வீட்டுவசதி கருத்தரங்கையொட்டி, நேற்று இரவு ஷா ஆலாமில் நடைபெற்ற ‘வீட்டுவசதி இலட்சியங்கள் இரவு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அமிருடின் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், ருமா சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருப்பதையும் அமிருடின் ஒப்புக்கொண்டார்.
குறிப்பாக, மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவது கட்டுமானத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதுபோன்ற சூழலில், திட்டமிட்டபடி வீடமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதுடன், வீடு வாங்குவோர் மீது கூடுதல் நிதிச் சுமை ஏற்படாமல் இருப்பதையும் உறுதிசெய்வது அவசியம் என்றார் அமிருடின்.

கட்டுமானச் செலவுகள் அதிகரிக்கும் சூழலிலும், வீடு வாங்குவோரின் நலன்கள் பாதிக்கப்படாமல் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதே மாநில அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமிருடின் தாக்கல் செய்த இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) கீழ், ருமா சிலாங்கூர் கூ ஹராப்பான் மற்றும் ருமா சிலாங்கூர் கூ இடாமான் ஆகிய வீடமைப்புத் திட்டங்கள் வாயிலாக மொத்தம் 2 லட்சம் மலிவு விலை வீடுகளை வழங்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.







