RS-2 திட்டம்: கல்வி, வாழ்க்கைச் செலவின விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை

2 செப்டெம்பர் 2026, 9:21 AM
RS-2 திட்டம்:  கல்வி, வாழ்க்கைச் செலவின  விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை

ஷா ஆலாம், செப். 2: வசதியான சூழல் மற்றும் சிறந்த பொதுப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைப் பராமரிப்பு, கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவின தொடர்பான விவகாரங்களிலும் சிலாங்கூர் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இதனை துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் (UTAR) பொருளியல் பேராசிரியர் டாக்டர் வோங் சின் யோங் வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசின் வருடாந்திர வரவு-செலவுத் திட்டம், எதிர்காலத்தில் ஒதுக்கீடுகள், ஊக்கத்தொகைகள் மற்றும் வரி கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

அதோடு இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) இலக்குகளுக்கு ஏற்ப மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

சிலாங்கூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு பொதுப் போக்குவரத்து முக்கிய மாற்று வழிகளில் ஒன்றாக விளங்குவதாகக் டாக்டர் வோங் குறிப்பிட்டார். எனினும் அந்தத் துறை மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இருக்கும் கல்வி மற்றும் குழந்தைப் பராமரிப்புத் துறைகளில் ஊக்கத்தொகைகளையும் உதவிகளையும் மேலும் விரிவுபடுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாக விளங்கினாலும், இங்கு வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதால் மக்கள் பல்வேறு நிதிச் சுமைகளை எதிர்கொள்வதாக டாக்டர் வோங் தெரிவித்தார்.

இதனால், RS-2 திட்டத்தில் ஓய்வுபெற்றவர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் தேவைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.

மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்களை அமைப்பது மட்டுமே தீர்வாகாது. மாறாக ஓய்வுபெற்றவர்கள் தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதற்கு கூடுதல் செயல்பாட்டு இடங்கள் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கையை ஆதரிக்கும் வசதிகள் உருவாக்கப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில், RS-2 திட்டத்தின் மூன்றாவது இலக்கு, மக்கள் வசிப்பதற்கு ஏற்ற நகரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

இதன் கீழ் 25 முன்முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு, மக்கள் வசதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதுடன், சமூக மேம்பாடு மற்றும் மக்களின் நலனையும் மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.