சிலாங்கூர் மாவட்டங்களுக்கிடையிலான வளர்ச்சி இடைவெளியை குறைக்க புதிய அணுகுமுறை – அமிருடின்

30 செப்டெம்பர் 2026, 9:03 AM
சிலாங்கூர் மாவட்டங்களுக்கிடையிலான வளர்ச்சி இடைவெளியை குறைக்க புதிய அணுகுமுறை – அமிருடின்

ஷா ஆலாம், செப்.30 — சிலாங்கூரின் மாவட்டங்களுக்கிடையே நிலவும் வளர்ச்சி இடைவெளியைக் குறைக்கும் மாநில அரசின் முயற்சிகள், மக்கள்தொகை சமமற்ற நிலையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படும் என மாநில மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரில் உள்ள சுமார் 7 மில்லியன் மக்களில் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் கிள்ளான், ஷா ஆலாம், சுபாங் ஜெயா மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய பகுதிகளில் வசிப்பதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

உலு லங்காட் மற்றும் காஜாங் போன்ற பகுதிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, மக்கள்தொகை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் செறிவு மேலும் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக சில மாவட்டங்கள் மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி மையங்களுக்கு மனிதவளம் மற்றும் பிற தேவைகளை வழங்கும் பகுதிகளாக மட்டுமே செயல்படும் நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.

உதாரணத்திற்கு, சபாக் பெர்ணாம் மற்றும் பெட்டாலிங் ஜெயா போன்ற பகுதிகளுக்கு இடையிலான வருமானம், உள்கட்டமைப்பின் தரம் மற்றும் பிற அம்சங்களில் காணப்படும் இடைவெளியை குறைப்பதற்கான வழிகளை சிலாங்கூர் ஆராய வேண்டும்.

அதேவேளை, ஒவ்வொரு பகுதியிலும் ஏற்கனவே இருக்கும் ஆற்றல்கள் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அமிருடின் வலியுறுத்தினார்.

இதன் அடிப்படையில், சிலாங்கூர் அடுத்த சில மாதங்களில் புதிய முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த முதலீடுகள் ஒவ்வொரு பகுதியின் தனித்துவமான வலிமைகளை அடிப்படையாகக் கொண்டு, வேளாண் சுற்றுலா, சுற்றுலா, சேவைத் துறை மற்றும் உற்பத்தித் துறை உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகளாக வகைப்படுத்தப்படும்.

இத்தகைய பொருளாதாரத் தொகுப்புகளை உருவாக்கும் அணுகுமுறை முதலாம் சிலாங்கூர் திட்டம் (RS-1) மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இரண்டாம் சிலாங்கூர் திட்டம் (RS-2) கீழ் மாவட்டங்களுக்கிடையிலான வளர்ச்சி இடைவெளியைக் குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அது மேலும் வலுப்படுத்தப்படுவதாகவும் அமிருடின் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, 2030ஆம் ஆண்டுக்குள் தென்கிழக்காசியாவில் ஒரு முன்மாதிரி மாகாணமாக சிலாங்கூரை நிலைநிறுத்த மாநில அரசு இலக்கு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த இலக்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமில்லாமல், மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.