'ஸ்மார்ட் சேவா' வீடுகளை 3,000 -ஆக அதிகரிக்கும் முடிவு; சிலாங்கூரில் பலர் சொந்த வீடுகளை வாங்க உதவும்

17 ஆகஸ்ட் 2026, 4:18 AM
'ஸ்மார்ட் சேவா' வீடுகளை 3,000 -ஆக அதிகரிக்கும் முடிவு; சிலாங்கூரில் பலர் சொந்த வீடுகளை வாங்க உதவும்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 17 — 2030ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூர் மாநிலத்தின் 'ஸ்மார்ட் சேவா' வாடகை வீடுகளின் எண்ணிக்கையை 3,000 -ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது வாடகையாளர்கள் தங்களது நிதி நிலையை வலுப்படுத்தி எதிர்காலத்தில் சொந்த வீடு வாங்குவதற்கு தயாராக உதவும் நடவடிக்கையாகும் என புத்ரா மலேசியா பல்கலைகழகத்தின் (UPM) நகர மற்றும் பிராந்திய திட்டமிடல், சமூக மேம்பாட்டுத் துறை விரிவுரையாளர் முகமட் முஜாஹிட் ஹசான் தெரிவித்துள்ளார்.

'ஸ்மார்ட் சேவா' திட்டத்தின் கீழ் வாடகைக்கு வசிக்கும் காலம், மக்கள் தங்களது நிதிநிலையை திட்டமிட்டு, வீடு வாங்குவதற்கான நீண்டகாலப் பொறுப்பை ஏற்கத் தயாராகும் வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

“இந்த வீடுகள் உண்மையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய, மாநில அரசு ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வீட்டு தேவைக்கான தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

“வீட்டின் விலைக்கு அடுத்தபடியாக அதன் அமைவிடம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், அது குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்புகள், பொது வசதிகள் மற்றும் அடிப்படைச் சேவைகளை அணுகும் வாய்ப்பைத் தீர்மானிக்கிறது,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துவாரியமான LPHS அறிமுகப்படுத்தியுள்ள வாடகைத் தொகையில் 30 விழுக்காட்டை சேமிப்பாக ஒதுக்கும் நடைமுறையும், வாடகையாளர்கள் எதிர்காலத்தில் சொந்த வீடு வாங்குவதற்குத் தேவையான சேமிப்பை உருவாக்க உதவும் என முகமட் முஜாஹிட் தெரிவித்தார்.

இதனிடையே, இரண்டாவது சிலாங்கூர் திட்டமான RS-2-ன் கீழ் செயல்படுத்தப்படும் வீடமைப்பு முயற்சிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, தற்போதைய நிதி நிலை காரணமாக வங்கிக் கடன் பெற்று சொந்த வீடு வாங்க முடியாதவர்கள் 'ஸ்மார்ட் சேவா' உள்ளிட்ட வீடமைப்புத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.