ஷா ஆலாம், செப். 3: இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் சுமார் RM5.2 லட்சம் மதிப்புடைய 3.452 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சாவைக் கடத்த முயன்றதாக 62 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவர் இந்திய சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நபர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு சென்னை சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவு (AIU) அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டனர்.
அவரது பதிவு செய்யப்பட்ட பயணப் பெட்டியை அதிகாரிகள் முழுமையாகச் சோதனையிட்டனர். அதன் அடிப்பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த மறைவு அறைக்குள் நான்கு பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பொட்டலங்களுக்குள் பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் உலர்ந்த பொருள் இருந்ததாகவும், அதன் மொத்த எடை 3,452 கிராம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட போதைப்பொருள் கண்டறியும் கருவி சோதனையில், கைப்பற்றப்பட்ட பொருள் கஞ்சா என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, இந்தியாவின் 1985ஆம் ஆண்டுக்கான போதைப்பொருள் மற்றும் மனநிலையை மாற்றும் பொருட்கள் சட்டத்தின் (NDPS Act) கீழ் அந்தக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், மலேசியப் பிரஜையும் சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்தக் கடத்தல் நடவடிக்கைக்குப் பின்னால் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் இந்திய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒரே மாத காலத்திற்குள் சென்னை விமான நிலையத்தில் ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் ஒருவர் கைது செய்யப்படுவது இது இரண்டாவது சம்பவமாகும்.







