செரி கெம்பாங்கானில் இலவச சுகாதாரப் பரிசோதனை: 300க்கும் மேற்பட்டோர் பயன்

11 அக்டோபர் 2026, 10:25 AM
செரி கெம்பாங்கானில் இலவச சுகாதாரப் பரிசோதனை: 300க்கும் மேற்பட்டோர் பயன்

ஷா ஆலாம், அக். 11 — சிலாங்கூர் அரசின் இலவச சுகாதாரப் பரிசோதனைத் திட்டத்தில் (Selangor Saring) செரி கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குறிப்பாக B40 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிகளவில் கலந்துகொண்டதாக அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி தெரிவித்தார்.

இப்பிரிவினருக்கு முறையான இடைவெளியில் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், இத்தகைய இலவசச் சேவைகள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் செலாங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்திருந்தனர். மேலும், 100 பேர் முன்பதிவின்றி நேரடியாக வருகை தந்து பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது இலவச சுகாதாரப் பரிசோதனைக்கான வாய்ப்பை ஏற்படுத்துவது, தங்களது உடல்நிலையை அறிந்துகொள்ள விரும்பும் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இம்முறை நடைபெற்ற நிகழ்ச்சியில் கண், காது பரிசோதனைகள், உடல் நலப் பரிசோதனை, பல் மருத்துவப் பரிசோதனை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டன.

இதனுடன், பொதுமக்களுக்கு இலவச மனநல ஆலோசனை வழங்குவதற்காகத் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுடனும் ஏற்பாட்டாளர்கள் இணைந்து செயல்பட்டனர்.

மனநல ஆலோசனைக்குப் பின்னரும் தொடர்ந்து சிகிச்சை அல்லது ஆலோசனை தேவைப்படுவோர், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் தங்களது அடுத்தகட்ட ஆலோசனை அமர்வுகளைத் தொடரலாம் என்றும் வோங் சியூ கி தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.