புத்ராஜெயா, அக். 12 – வாடகைக் கார் ஓட்டுநர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 38,000 டாக்சி ஓட்டுநர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் தலா 1,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி,எதிர்வரும் புதன்கிழமை முதல் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும்.
இதனை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த நிதியுதவி விரைவில் வழங்கப்படும்; குறிப்பாக இந்து சமயத்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர்கள் தீபாவளிக்கு முன்னதாக உதவித்தொகையைப் பெறுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

முதல் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டுநர்கள் போக்குவரத்து அமைச்சுக்கு அழைக்கப்பட்டு நிதியுதவிக்கான பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வார்கள்; அதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கும் படிப்படியாக உதவித்தொகை வழங்கப்படும்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில், இந்த நிதியுதவியை எவ்வாறு உடனடியாக வழங்க முடியும் என்ற கேள்விகளுக்கும் அவர் விளக்கமளித்தார்.
பிரதமர் அறிவித்த இந்த உதவித்திட்டத்திற்கான நிதி, நடப்பு ஆண்டிலேயே கிடைத்துள்ளதாகவும், சிறப்புப் பதிவு எண் தொடரான ‘H’ (NPI) விற்பனை மூலம் கிடைத்த வருவாயிலிருந்து இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அந்தோணி லோக் கூறினார்.
இதற்கு முன்னதாக, ‘H’ சிறப்புப் பதிவு எண்களுக்கான ஏலத்தின் மூலம் மொத்தம் 91.2 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, சிறப்புப் பதிவு எண்கள் விற்பனை மூலம் கிடைத்த வருவாயின் ஒரு பகுதியை மக்களுக்குத் திருப்பி வழங்கும் நடவடிக்கையாக இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, மாதம் 50 ரிங்கிட் கட்டணத்தில் வழங்கப்படவுள்ள ‘MyKomuter50’ மாதாந்திரப் பயண அட்டை, அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த அட்டையின் மூலம் மலேசியக் குடிமக்கள் 30 நாள்களுக்கு கேடிஎம் கொம்யூட்டர் (KTM Komuter) ரயில் சேவைகளை வரம்பற்ற முறையில் பயன்படுத்த முடியும்.







