புத்ராஜெயா, அக் 14: தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக நாடு முழுவதும் உள்ள சுமார் 53,000 டாக்சி, வாடகை கார் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் தலா 1,000 ரிங்கிட் ஒருமுறை நிதியுதவியைப் பெறுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 53 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள், நேரடி விநியோகம் மற்றும் இணைய பரிமாற்றங்கள் மூலம் படிப்படியாக ஓட்டுநர்களுக்கு முழுமையாகச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரை பொதுப் போக்குவரத்து அமைப்பின்(APAD) தரவுகளின் அடிப்படையில் தகுதியான ஓட்டுநர்கள் சரிபார்க்கப்பட்டு, தீபாவளிக்கு முன்பே அனைவரும் இந்த உதவியைப் பெறுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் இலக்கு என்று அமைச்சர் தெரிவித்தார்.
இன்று மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 500 ஓட்டுநர்களுக்கு அடையாளப்பூர்வமாக நிதியுதவி வழங்கும் விழாவிற்குப் பிறகு அந்தோணி லோக் ஊடகங்களிடம் பேசினார்.
இந்த நிதியுதவியைப் பெற ஓட்டுநர்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. APAD, சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் சபா, சரவாக் வர்த்தக வாகன உரிம வாரியங்களின் தரவுத்தளங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதற்கு செல்லுபடியாகும் பொதுச் சேவை வாகன (PSV) தொழிற்கல்வி உரிமம் மட்டுமே ஒரே தகுதியாகும்.
இந்த நிதியுதவியைப் பெறாத ஓட்டுநர்கள் தங்கள் விவரங்களைப் புதுப்பிக்க அந்தந்த சங்கங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டத்திற்கான நிதி ஆதாரம் குறித்துப் பேசிய அமைச்சர், அந்த நிதி வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிலிருந்து பெறப்படவில்லை என்றும், மாறாக கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பு 'H' வாகனப் பதிவு எண் தொடரின் ஏலத்தின் மூலம் திரட்டப்பட்ட 91 மில்லியன் ரிங்கிட் வருவாயின் ஒரு பகுதியிலிருந்து நிதியளிக்கப்படுகிறது என்றும் விளக்கினார்.





