ஷா ஆலம், அக் 21: மூன்று பயணிகளுக்கு சட்டவிரோதமாக போக்குவரத்து சேவை வழங்கி, RM120 கட்டணத்தை வசூலித்த ஆணொருவர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் 2-யில் சாலைப் போக்குவரத்து துறை நடத்திய அமலாக்க நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.
அந்த நபர் தொயோத்தா வியோஸ் காரை ஓட்டி வந்து KLIA நிலைய அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட கண்காணிப்பில், அவர் அனுமதியற்ற போக்குவரத்து சேவையை வழங்கி பயணிகளை அழைத்து சென்றது கண்டறியப்பட்டதாக சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேல் விசாரணைக்காக வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படலாம்.
இதற்கிடையில், சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, KLIA 1 மற்றும் 2இல் உள்ள அதிகாரப்பூர்வ கவுண்டர் அல்லது உரிமம் பெற்ற ஈ-ஹெய்லிங் பயன்பாடுகள் வழியாக மட்டுமே போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் போக்குவரத்துடன் தொடர்புடைய எந்த தகவல் அல்லது புகார்களும் aduantrafik@jpj.gov.my என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது e-aduan@JPJ பயன்பாட்டின் மூலம் அனுப்பலாம்.