கோலாலம்பூர், ஜூலை 3 - நாடு முழுவதும் உள்ள டாக்சி ஓட்டுநர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அரசாங்கம் கூடுதலாக ஒரு கோடி ரிங்கிட் (RM10 million) ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணிகளிடம் மலேசியர்களின் நற்பண்புகளையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் முன்வரிசைப் பணியாளர்களாக விளங்கும் டாக்சி ஓட்டுநர்களுக்கு, அரசாங்கம் அளிக்கும் அங்கீகாரமே இந்த நிதி ஒதுக்கீடு என்று அவர் கூறினார்.
"வெளிநாடுகளுக்குச் சென்ற நமக்குத் தெரியும், ஒரு டாக்சி ஓட்டுநர் முரட்டுத்தனமாகவும் சுபாவமில்லாமலும் நடந்துகொண்டால், அது சுற்றுலாப் பயணிகளைக் கவராது" என்று அவர் குறிப்பிட்டார்.
“மலேசியர்கள் மிகவும் பண்பானவர்கள், மரியாதையானவர்கள், அன்பானவர்கள் என்பதை சுற்றுலாப் பயணிகள் காண்கிறார்கள்". இந்த நல்ல வரவேற்பின் காரணமாகவே, இன்று தாம் டாக்சிகளுக்காக பிரத்யேகமாக கூடுதலாக ஒரு கோடி ரிங்கிட் நிதியை அங்கீகரித்திருப்பதாக, மெர்டேகா சதுக்கத்தில் (Dataran Merdeka) நடைபெற்ற 'மடானி தேசிய டாக்சி சீரமைப்புத் திட்டத்தை' தொடங்கி வைத்து உரையாற்றுகையில் அவர் அவ்வாறு கூறினார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், டாக்சி ஓட்டுநர்களின் நலன் திட்டங்கள், வாகன உரிமையாளர் உதவி மற்றும் பயிற்சித் திட்டங்களை வலுப்படுத்துவதற்காக, தற்போதைய உதவித் திட்டங்களின் மூலமாக இந்த நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
போட்டியாற்றல், வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு, வாகனங்களின் நிலை குறித்து டாக்சி ஓட்டுநர்களின் கவலைகளை தாம் அறிவேன் எனவும் மடானி அரசாங்கம் அந்தக் குழுவினரை ஒருபோதும் புறக்கணிக்காது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.







