கோலாலம்பூர், நவ.6 – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தகுதிபெற்ற டாக்ஸி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்களில் 80% அதிகமானோருக்கு தலா RM1,000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதாக தரைவழிப் பொதுப் போக்குவரத்து நிறுவனமான APAD தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் ஓட்டுநர் அட்டைகளைக் கொண்ட 15,062 டாக்ஸி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்கள் இந்த நிதியுதவிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 2,619 பேருக்கு அக்டோபர் 14 முதல் நவம்பர் 2 வரை BSN வங்கி மூலம் ரொக்கப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள 12,033 ஓட்டுநர்களுக்கான நிதியுதவி வழங்கும் நடவடிக்கை நவம்பர் 4-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அவர்களின் வங்கிக் கணக்குகள், சும்பாங்கான் துனாய் ரஹ்மா (STR) திட்டத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் அல்லது வங்கிக் கவுன்ட்டர்கள் வழியாகப் பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், செப்டம்பர் 30-ஆம் தேதிக்குப் பின்னர் அக்டோபர் 25-ஆம் தேதி வரை ஓட்டுநர் அட்டைகளைப் புதுப்பித்தவர்களுக்கான தகுதி சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவர்களுக்கான தலா RM1,000 நிதியுதவி நவம்பர் 11-ஆம் தேதி முதல் வங்கிக் கணக்குகள் அல்லது வங்கிக் கவுன்ட்டர்கள் வழியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சுமார் 7,228 பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் தலா RM1,000 சிறப்பு நிதியுதவி விரைவில் வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கான நிதி நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என APAD தெரிவித்துள்ளது. பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல் தங்களது நிதியுதவித் தகுதியைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
மடாணி அரசின் இந்தச் சிறப்பு நிதியுதவித் திட்டம், பொதுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஓட்டுநர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதுடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளதாக APAD தெரிவித்துள்ளது.







