சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழா: சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீடு

29 அக்டோபர் 2026, 4:56 AM
சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழா: சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீடு
சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழா: சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீடு

ஷா ஆலாம், அக்.29: சிலாங்கூர் சுல்தானாக ஒன்பதாவது முறையாகப் பொறுப்பேற்று, 25 ஆண்டுகால ஆட்சியை நினைவுகூரும் வெள்ளி விழாவை முன்னிட்டு, சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்-ஹாஜ் அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலைகளை போஸ் மலேசியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சுல்தானின் ஆட்சியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மொத்தம் 8 லட்சம் சிறப்பு அஞ்சல் தலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் என மூன்று வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த அஞ்சல் தலைகள், சிலாங்கூர் அரச குடும்பத்தின் அடையாளத்தையும் தனித்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் அரச குடும்பத்தின் முக்கிய அடையாளங்களான அரசவைக் கூடம், 'தெங்கோலோக் பலுங் ராஜா' எனப்படும் அரச தலைப்பாகை, 'கெரிஸ் தெராப்பாங் காபுஸ்' எனும் பாரம்பரிய அரச கத்தி மற்றும் ஒன்பது இதழ்களைக் கொண்ட பூங்கொத்து வடிவிலான 'பூங்கா தஞ்சுங்' ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதனுடன், வெள்ளி விழாவின் அதிகாரபூர்வ இலச்சினையும் சிலாங்கூர் மாநிலத்தின் அரச சின்னமும் அஞ்சல் தலைகளில் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சிறப்பு வெளியீட்டின் மற்றுமொரு தனித்துவமாக, வெள்ளி நிற அச்சு மை மற்றும் 'ஸ்பாட் யூவி' எனப்படும் பிரத்தியேக அச்சுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரச தம்பதியரின் உருவப்படத்தின் குறிப்பிட்ட பகுதிகள் பளபளப்பான தோற்றத்தைப் பெறுகின்றன.

போஸ் மலேசியா, சிலாங்கூர் மாநில அரசுச் செயலாளர் அலுவலகம் மற்றும் மலாயா தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான யுனிவர்சிட்டி டெக்னோலோஜி மாரா (UiTM) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தச் சிறப்பு அஞ்சல் தலைகளைத் தயாரிக்கும் பணிக்கு வடிவமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் தேர்வுகள் உட்பட எட்டு முதல் 12 மாதங்கள் வரை எடுத்துக்கொண்டதாகப் போஸ் மலேசியாவின் அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் சேகரிப்புப் பிரிவுத் தலைவர் ஹைடான் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

புதிய அஞ்சல் தலை வெளியீட்டுக்காக முத்திரை சேகரிப்பாளர்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும், குறிப்பாக குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது அரச குடும்ப நிறுவனங்கள் தொடர்பான அஞ்சல் தலைகளைச் சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர்கள் இந்த வெளியீட்டில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

போஸ் மலேசியா நிறுவனம், பொருளின் வகை மற்றும் சேகரிப்பாளர்களின் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு எண்ணிக்கைகளில் அஞ்சல் தலைகளை வெளியிட்டு வருகிறது. இருப்பினும், அரச குடும்ப நிறுவனங்கள் தொடர்பான சிறப்பு வெளியீடுகள் பொதுவாக அதிக வரவேற்பைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, முதல் நாள் அஞ்சல் உறைகள் முத்திரை சேகரிப்பாளர்கள் மத்தியில் எப்போதும் பிரபலமான தேர்வாக இருந்து வருகின்றன. அவற்றில் அஞ்சல் தலை மற்றும் சிறப்பு ரத்துச் சின்னம் இடம்பெற்றிருப்பதால், ஒவ்வொரு சேகரிப்பும் தனித்துவமான வரலாற்று ஆவண மதிப்பைப் பெறுகின்றன.

முத்திரை சேகரிப்பாளர்களைப் பொறுத்தவரையில், ஒரு சேகரிப்பின் மதிப்பு அதன் தோற்றத்திலோ விற்பனை விலையிலோ மட்டும் தங்கியிருப்பதில்லை. மாறாக, அந்த வெளியீட்டின் பின்னணியில் உள்ள வரலாறு, வடிவமைப்பின் தனித்துவம் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்கக்கூடிய ஆவண மதிப்பு ஆகியவையே முக்கியத்துவம் பெறுகின்றன.

சுல்தான் சிலாங்கூரின் வெள்ளி விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தச் சிறப்பு அஞ்சல் தலைகள், அக்டோபர் 19ஆம் தேதி ஷா ஆலாமில் உள்ள ராஜா துன் உடா நூலகத்தில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

அக்டோபர் 20ஆம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் போஸ் மலேசியாவின் விற்பனை வழித்தடங்கள் ஊடாக அவை அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளன.

இந்நிகழ்வில், சிலாங்கூர் மாநில கருவூலத்தால் தயாரிக்கப்பட்ட சிறப்பு வெள்ளி நாணயமும் அறிமுகப்படுத்தப்பட்டது. சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாணயம் வெளியிடப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.