ஷா ஆலாம், நவ. 17: சிலாங்கூர் அரசின் பிங்காஸ் மற்றும் மெஸ்ரா ஊசியா இமாஸ் (SMUE) உதவித் திட்டங்களின் கீழ் அடுத்த ஆண்டு பயன்பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என செரி கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கீ கோரிக்கை விடுத்துள்ளார்.
பிங்காஸ் திட்டத்தின் தற்போதைய 10,000 உதவி இடங்களை 15,000-ஆக உயர்த்துவதுடன், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப உதவிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என அவர் முன்மொழிந்தார்.

பிங்காஸ் பயனாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் பொருளாதார ரீதியாக மேம்பட்டு வறுமையிலிருந்து மீள்வதற்கு தொடர் வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், நகர்ப்புற வறுமையையும் உதவிக்கான தகுதியை நிர்ணயிக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையில், மூத்த குடிமக்களுக்கான SMUE திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு மேலும் 10,000 உதவி இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு புதிதாக ஒதுக்கப்பட்ட 50,000 இடங்களும் விண்ணப்பங்கள் திறக்கப்பட்ட மூன்றே வாரங்களில் நிரம்பிவிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், பல மூத்த குடிமக்களுக்கு உதவி கிடைக்காமல் போனதாகத் தெரிவித்தார்.
மேலும், சிலாங்கூரில் பிறந்த 4,000 மாணவர்களுக்கு UNISEL மற்றும் UIS பல்கலைக்கழகங்களில் 50 விழுக்காடு இலவசக் கல்விக் கட்டணம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட மாநில அரசின் கல்வி முன்னெடுப்புகளையும் வோங் சியூ கீ பாராட்டினார்.
கல்வி உதவித்தொகை பெற்று சிறப்பாகப் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு மாநில அரசுத் துறைகள், அரசு அமைப்புகள் மற்றும் அரசு தொடர்புடைய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை வழங்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.

அதேவேளையில், உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டத்தின் பயனாளர்கள் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு 3,000-இலிருந்து 5,000-ஆக உயர்த்தியிருப்பதையும் அவர் வரவேற்றார்.
2027 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்கு RM5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உதவி பெறுவதற்கான குடும்ப மாத வருமானத் தகுதி வரம்பை RM8,000 மற்றும் அதற்குக் குறைவாகப் பெறும் குடும்பங்கள் வரை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வோங் சியூ கீ வலியுறுத்தினார்.







