குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொழிலாளர் சந்தையின் முக்கிய சீர்திருத்தம்

10 அக்டோபர் 2026, 1:51 AM
குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொழிலாளர் சந்தையின் முக்கிய சீர்திருத்தம்

கோலாலம்பூர், அக். 10 – குறைந்தபட்ச ஊதியத்தை RM2,000 ஆக உயர்த்தும் நடவடிக்கை, தொழிலாளர் சந்தையில் மேற்கொள்ளப்படும் முக்கியமான சீர்திருத்தமாகும்.

இந்நடவடிக்கை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஊழியர் சேமநிதி வாரியமான இ.பி.எஃப். உறுப்பினர்களின் ஓய்வுக்கால நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவும் என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி அஹ்மட் சுல்கர்னைன் ஒன் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை உறுதிப்படுத்துவதுடன், நாட்டின் மொத்த வருமானத்தில் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் பங்கை அதிகரிப்பதற்கும் இந்நடவடிக்கை சிறந்த முன்னெடுப்பாக அமையும்.

அதேவேளையில், அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்களில் (GLIC) வாழ்வாதார ஊதியத்திற்கான வரம்பை RM3,400 ஆக உயர்த்தும் முன்முயற்சியையும் இ.பி.எஃப். ஆதரிப்பதாக அவர் கூறினார். இந்த நடவடிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் இ.பி.எஃப். உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஓய்வுக்காலச் சேமிப்புத் திட்டங்களில் அதிகமானோர் இணைவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த மலேசியக் குடிமக்கள் 18 வயதை அடைந்தவுடன் தானாகவே இ.பி.எஃப். உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலும், மின்-வாடகை வாகனச் சேவை (e-hailing) மற்றும் பொருள் விநியோகச் சேவை (p-hailing) ஓட்டுநர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள i-Saraan Plus திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அஹ்மட் சுல்கர்னைன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய ஓட்டுநர்கள், அரசாங்கத்திடமிருந்து 20 விழுக்காடு இணை ஊக்கத்தொகையைப் பெறலாம். இதற்கான ஆண்டு உச்சவரம்பு RM600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள i-Emas திட்டத்தின் மூலம், உறுப்பினர்கள் தங்களது 55 வயது மற்றும் 60 வயது ஓய்வுக்காலப் பணத்தை ஒரே தடவையில் முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, மாதாந்திரத் தவணைகளாகப் பெற்றுக்கொள்ளும் தெரிவை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு இ.பி.எஃப். கணக்கில் தொடர்ந்து வைத்திருக்கும் சேமிப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஈவுத்தொகை கிடைக்கும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.