புத்ராஜெயா, அக்.9 – சிலாங்கூரில் புகைமூட்டம் தொடர்ந்து நீடித்தால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த மாற்றுத் திட்டங்களை மாநிலக் கல்வித் துறை உருவாக்க வேண்டும்
இதனை மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, எஸ்.பி.எம். தேர்வை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
புகைமூட்டம் காரணமாக மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டால், வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்க மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மாமன்னரின் உத்தரவை மாநில அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அமிருடின், இன்று சிலாங்கூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையான பி.டி.பி.ஆர். (PdPR) அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
புகைமூட்டப் பாதிப்பு அக்டோபர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அண்மைய அறிக்கைகளின்படி, இந்த நிலைமை நவம்பர் மாதம் வரையிலும் நீடிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வுகள் அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன.
புகைமூட்டப் பாதிப்பு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், தேர்வுகளைத் திட்டமிட்டபடி நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தேவையான மாற்று ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.







