ஷா ஆலாம், அக் 8 : காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 180-க்கும் அதிகமாகப் பதிவாகும் பகுதிகளில் உள்ள கல்வி அமைச்சுக்குக் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் நாளை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 150-க்கும் மேல் பதிவாகும் பகுதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், அங்கு பள்ளிகள் அக்டோபர் 12-ஆம் தேதி முதல் ( திங்கட்கிழமை ) மூடப்படும் என்றும் கல்வித் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அஸாம் அஹ்மாட் கூறினார்.
நாட்டில் நிலவி வரும் புகைமூட்டத்தைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
இன்று இரவு 7.10 மணி நிலவரப்படி, ஜோகூரில் , செகாமட், நெகிரி செம்பிலானில், சிரம்பான், நீலாய் ஆகிய மூன்று பகுதிகள் 180-க்கும் அதிகமான காற்றுத் தூய்மைக் கேட்டு குறியீட்டைப் பதிவு செய்தன.
இதற்கிடையில், ஜொகூரின் குளுவாங் பகுதி சரியாக 180 ஐப் பதிவு செய்துள்ளது. பகாங்கின் ரொம்பின் மற்றும் சிலாங்கூரின் ஜோஹான் செத்தியா முறையே 178 ஐப் பதிவு செய்து, கல்வி அமைச்சு நிர்ணயித்த மூடல் நிலையை நெருங்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கற்றல் செயல்முறை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, வீட்டிலிருந்தே கற்றல் மற்றும் கற்பித்தல் (PdPR) முறையைச் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
PdPR-இன் அமலாக்கம் மாணவர்களின் திறன், அணுகல், தேவைகள் மற்றும் ஆசிரியர்களின் தயார்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில் ஆசிரியர்களும் செயலாக்க குழுவினரும் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
மாநிலக் கல்வித் துறை, மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து காற்றுத் தூய்மைக் கேட்டு குறியீட்டைக் கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டும்போது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகமட் அஸாம் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் புகைமூட்டத்தைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து கவலை தெரிவித்த பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் கட்டளையையும் இந்த உத்தரவு கருத்தில் கொண்டுள்ளது.







