மோசமடைந்திருக்கும் புகை மூட்டம்: நடவடிக்கை எடுக்க பிரபோவோ இணக்கம்

8 அக்டோபர் 2026, 9:30 AM
மோசமடைந்திருக்கும் புகை மூட்டம்: நடவடிக்கை எடுக்க பிரபோவோ இணக்கம்

கோலாலம்பூர், அக்டோபர் 8 - மலேசியாவைப் பாதித்து வரும் மோசமான புகைமூட்டப் பிரச்சினைக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஒப்புக் கொண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிரதமர் அன்வார் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

புகைமூட்டம் உண்மையில் கவலையளிப்பதாகவும், இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அன்வார் கூறினார்.

"புகைமூட்டத்தைப் பொறுத்தவரை, நிலைமை உண்மையில் கவலையளிக்கிறது. நான் அதிபர் பிரபோவோவைத் தொடர்பு கொண்டேன், அவரும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டார்.

அதே நேரத்தில், வெளியுறவு அமைச்சர் (டத்தோஸ்ரீ முகமட் ஹசான்) மற்றும் இயற்கை வள- சுற்றுச்சூழல் அமைச்சர் (டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப்) ஆகியோரும் தங்களின் இந்தோனேசியப் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்." என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் உள்ள நிதி அமைச்சில் நடைபெற்ற '2027 வரவு செலவுத் திட்ட மறுஆய்வு நாள்' நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மோசமடைந்து வரும் புகைமூட்டம் பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதால், இவ்விவகாரத்தில் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக மலேசிய அரசாங்கம் கடந்த சில வாரங்களாகவே விருப்பம் தெரிவித்து வந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

"மலேசிய அரச வான்படை (RMAF) மற்றும் பிற சம்பந்தப்பட்ட அமைப்புகள் மூலம் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் செயற்கை மழை பொழியவைக்கும் நடவடிக்கைகளை நாங்கள் அதிகரித்து வருகிறோம்.

இருப்பினும் நிலைமை இன்னும் கவலையளிப்பதாகவே உள்ளது. இருப்பினும், நாங்கள் மீண்டும் முயற்சிப்போம். ஆசியான் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்கும் மற்றொரு கூட்டத்தை நடத்த முடியுமா என்று பார்ப்பதற்கு, ஆசியான் செயலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சரிடம் நான் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

இவையனைத்தும் நாங்கள் எடுத்து வரும் மற்றும் கண்காணித்து வரும் நடவடிக்கைகளாகும்; அதே நேரத்தில் தேவையான இதர நடவடிக்கைகளைச் செயல்படுத்த முயன்று வருகிறோம்," என்று அவர் கூறினார்.

இந்தோனேசியாவில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் காடு மற்றும் நிலக்கரி நிலத்தடித் தீ (peatland fires) காரணமாக மலேசியாவில் புகைமூட்டம் நீடித்து வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.