பள்ளிகளுக்கு முகக்கவசங்கள் வழங்க சிலாங்கூர் தயார்: நிலைமை மோசமடைந்தால் நடவடிக்கை

8 அக்டோபர் 2026, 6:26 AM
பள்ளிகளுக்கு முகக்கவசங்கள் வழங்க சிலாங்கூர் தயார்: நிலைமை மோசமடைந்தால் நடவடிக்கை
பள்ளிகளுக்கு முகக்கவசங்கள் வழங்க சிலாங்கூர் தயார்: நிலைமை மோசமடைந்தால் நடவடிக்கை

ஷா ஆலாம்,அக் 8 : சிலாங்கூர் மாநிலத்தில் புகை மூட்டம் மோசமடைந்து, அது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டால், இங்குள்ள பள்ளிகளுக்கு முகக்கவசங்களை விநியோகிக்க சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது.

மாநிலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்கு முன், வானிலை மற்றும் புகை மூட்ட நிலைமை குறித்த இறுதி அறிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையத்திடமிருந்து மாநில அரசு எதிர்பார்த்துக் காத்திருப்பதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருதின் ஷாரி தெரிவித்தார்.

"இதுகுறித்து சில வாரங்களுக்கு முன்பு நாங்கள் விவாதித்தோம். புகை மூட்டம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கணிப்பைக் காண வானிலை ஆய்வு மையத்தின் இறுதி அறிக்கைக்காக நான் காத்திருக்கிறேன்.

"பள்ளிகளுக்கு முகக்கவசங்கள் வாங்குவதற்கும் மற்றும் இதர உதவிகளைச் செய்வதற்கும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன," என்று இன்று இங்கு நடைபெற்ற 'ஜெலாஜா செஜாஹ்தெரா மதானி-மக்கள் நலக் காப்பீட்டுத் திட்டத்தின் (Jelajah Sejahtera Madani-Skim Insurans Kesejahteraan Rakyat-SIKR) தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, மாநிலக் கல்வித் துறையுடன் விரைவில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமீருதின் கூறினார்.

"இன்றும் நாளையும் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ஏனெனில் எஸ்பிஎம் (SPM) தேர்வுக்கு முன்னதாக, நவம்பர் 11-ஆம் தேதிவாக்கில் பள்ளித் தவணை முடிவடையும்.

இன்று அல்லது நாளைக்குள் நான் மாநிலக் கல்வித் துறையைச் சந்தித்து, உடனடியாக என்னென்ன அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஆலோசிப்பேன்.

"காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு (API) 200 புள்ளிகளை எட்டும்போது பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படலாம்.

அதற்கான நிலையான வழிகாட்டுதல்கள் எங்களிடம் ஏற்கனவே உள்ளன. குறியீடு 200-ஐ எட்டினால் பள்ளிகள் மூடப்படும், அந்த அதிகாரம் கல்வித் துறையிடம் உள்ளது," என்று அவர் கூறினார்.

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, நாட்டின் 38 பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டைப் பதிவு செய்தன.

சுற்றுச்சூழல் துறையின் (JAS) மலேசிய காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) இணையப்பக்கத்தின்படி, ஜொகூரிலுள்ள செகாமட் பகுதி மிக அதிகபட்சமாக 189 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலானில் உள்ள நீலாய் மற்றும் சிரம்பான் முறையே 184 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளன.

சிலாங்கூரில், ஜோஹான் செத்தியா, ஷா ஆலாம், பந்திங், கிள்ளான் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய ஆறு பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டைப் பதிவு செய்துள்ளன.

இதற்கிடையில், ஜொகூர் மாநிலம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.