ஷா ஆலாம், அக் 15 - சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களும் நாளை (அக்டோபர் 16) வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், புகை மூட்டம் காரணமாகப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் புகை மூட்டப் பாதிப்பைக் குறைக்கும் வகையில் முகக்கவசங்களை அணியுமாறு சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை ஊக்குவித்துள்ளது.
அதே வேளையில், தங்களின் பிள்ளைகளின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள், அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அது குறித்து முன்கூட்டியே பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில், சுற்றுச்சூழல் துறையின் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (API) அளவுகளைக் கல்வித் துறையும் பள்ளி நிர்வாகங்களும் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், குறிப்பாக அதிக ஆபத்துள்ள (ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் உள்ள) மாணவர்களுக்குத் தனி கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இது தொடர்பான சரியான மற்றும் தற்போதைய தகவல்களைப் பெற எப்போதும் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை அல்லது பள்ளியின் அதிகாரப்பூர்வத் தகவல் ஊடகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





